Blue Sattai Maran: 58 வடைக்கு ஜி.எஸ்.டி ரசீது எங்க? ஞானவேல் ராஜாவிடம் நக்கல் செய்யும் ப்ளூ சட்டை!
சென்னை: நான்கைந்து படங்கள் தோல்வியைச் சந்திக்கும்போது எந்த அளவுக்கு ஒரு நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும் ட்ரோல் செய்யப்படுவார்களோ அந்த அளவுக்கான ட்ரோலினை கங்குவா படத்தின் முதல் பாகத்தினை ரிலீஸ் செய்துவிட்டு, சூர்யா, சிவா மற்றும் ஞானவேல் ராஜா ஆகியோர் எதிர்கொண்டு வருகின்றனர். இப்படியான நிலையில் ஒரு படம் நன்றாக இருக்கின்றது என்றாலே, படத்தில் இவற்றையெல்லாம் சிறப்பாக செய்திருக்கலாம் என தனது விமர்சனத்தில் கூறுபவர் ப்ளூ சட்டை மாறன்.
இவர் இப்படிக் கூறுவதைப் பார்க்கவே அவரைப் பின் தொடருபவர்கள் ஆவலாக இருக்கின்றார்கள் எனலாம். இப்படியான நிலையில் சூர்யா நடிப்பில் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆன கங்குவா படத்தினை விமர்சனத்திலும் சரி, மற்ற விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் கூறும் பல கருத்துக்களை தேடித் தேடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார் ப்ளூ சட்டை மாறன். குறிப்பாக இதற்கு முன்னர் வெளியான எந்தப் படத்திற்கும் ப்ளூ சட்டை மாறன் இதுபோல நடந்து கொண்டது கிடையாது என அவரைப் பின் தொடருபவர்களே கூறும் அளவிற்கு அவரது நடவடிக்கைகள் இருக்கின்றது.

இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, கங்குவா படத்தின் ப்ரோமோசனின்போது படக்குழுவினர் படம் குறித்து தெரிவித்த கருத்துகள்தான். இன்னும் சொல்லப்போனால் ஓவர் பில்டப்கள்தான் எனலாம். தனது எக்ஸ் பக்கத்தில், கங்குவா படத்தின் ப்ரோமோசனின்போது படக்குழுவினர் என்னமாதிரியான ஓவர் பில்டப்களைக் கொடுத்தார்கள் என தனி பட்டியலே தயார் செய்து பகிர்ந்தார்.
மேலும் மெம்மரீஸ் என ஊடகங்களில் வெளியான செய்தித் துணுக்குகளையும் தொடர்ந்து பகிர்ந்து வந்தார். ப்ளூ சட்டை மாறனைப் பொறுத்தவரையில், நடிகர் சூர்யா, இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இயக்குநர் சிவா ஆகியோரைத்தான் அதிகம் டார்கெட் செய்தார். அதேநேரத்தில் தயாரிப்பாளார் ஞானவேல் ராஜாவையும் சும்மா விடவில்லை. படத்தின் முதல் நாள் வசூல் குறித்து எப்படியும் படக்குழு தகவல் தெரிவித்தபோதும் அதற்கு முன்னரும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை அட்டாக் செய்து வந்தார்.

கங்குவா 2: அந்த வகையில் நேற்று படத்தின் வசூல் விபரத்தினை படக்குழு தெரிவிக்கும் முன்னர், " கங்குவா பார்ட் 2 இன்னும் மிரட்டலாக இருக்கும். 2027 இல் வெளியாகும். அந்த தேதியில் எங்களுடன் போட்டி போட யாருக்கும் தைரியம் இருக்காது - ஞானவேல்" என ப்ரோமோசனின் போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியதைப் பகிர்ந்தார். மேலும் இசை வெளியீட்டு விழாவில் ஞானவேல் ராஜா கூறிய," கங்குவா பான் இந்தியா ரெக்கார்ட் படைக்கும், உலகம் முழுவதும் உள்ள விநோகிஸ்தர்களை அழைத்து வெற்றி விழா நடத்தப்படும்" எனக் கூறியதையும் பகிர்ந்திருந்தார்.

வசூல்: இப்படியான நிலையில் நேற்று படக்குழு படத்தின் முதல் நாள் வசூல் ரூபாய் 58.62 கோடிகள் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. உடனே அதற்கு வடை ஆரம்பம் எனப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதாவது நவம்பர் 16ஆம் தேதி காலை 7.41 மணிக்கு தனது எக்ஸ் பக்கத்தில்," எலே வீரபாகு.. ஒவ்வொரு தடவையும் கலக்சன் சொல்றப்ப GST சலான் ஆதாரத்தை வெளியிடுவேன்னு சொன்னியே.. 58 வடைக்கு ரசீது எங்க? சீக்கிரம் சொல்லப்பா. எல்லாருக்கும் ஏகப்பட்ட ஜோலி கெடக்கு" எனப் பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

ஜி.எஸ்.டி: இந்தப் பதிவுக்கு இணையவாசி ஒருவர், அதெல்லாம் எதற்கு என கமெண்ட் செய்ய, ப்ளூ சட்டை மாறனோ, வடையில் உள்ள எண்ணையை பிசுக்க என பதிவிட்டுள்ளார். கங்குவா படத்தின் ப்ரோமோசனின்போது, பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, படத்தின் வசூல் குறித்தும் அரசுக்கு செலுத்தும் ஜி.எஸ்.டி பில் குறித்தும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுவதாக தெரிவித்தார். நேற்றே இணையவாசிகள் பலரும் 'அண்ணே அந்த ஜி.எஸ்.டி பில்' என ட்ரோல் செய்து கொண்டு இருந்தனர். இப்படியான நிலையில் ப்ளூ சட்டை மாறனும் ஜி.எஸ்.டி பில் கேட்டிருப்பது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











