சுடுதண்ணிய புடிச்சி மூஞ்சில ஊத்துற டீ மாஸ்டர்கள் இங்க ஏராளம்.. பவன் கல்யாணுக்கு ப்ளூ சட்டை மாறன் எச்சரிக்கை
மதுரை: நடிகராக இருந்து ஜனசேனா கட்சியைத் தொடங்கிய பவன் கல்யாண் ஆந்திராவின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து அவரது அட்ராசிட்டிகளைத் தாங்க முடியவில்லை என பலரும் புலம்பும் அளவுக்கு அவரது நடவடிக்கைகள் உள்ளது. திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக கிளம்பிய புரளியை நம்பிய துணை முதலமைச்சராக பவன் கல்யாண் மட்டுமே இருக்க முடியும் எனக் கூறும் அளவுக்கு அவரது பேச்சுகள் இருந்தது.
தெளிவான விசாரணை நடத்தி அதன் பின்னர் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதா இல்லையா என்பதை கண்டறிந்து, ஒருவேளை விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து விட்டு பவன் கல்யாண் அதனை தனது அரசியல் லாபத்திற்காக பெரிய பிரச்னையாக மாற்றினார். நீதிமன்றம் குட்டு வைத்த பின்னர்தான் கப்சிப் ஆனார் என்ற விமர்சனம் அவர் மீது பல அரசியல் தலைவர்கள் முன் வைத்து வருகிறார்கள்.
அதேபோல் மதுரை மாவட்ட திருப்பரங்குன்றம் மலையில் காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்கா குறித்து எழுந்த சர்ச்சையில் வான்டடா வந்து அட்டனஸ் போட்டவர் பவன் கல்யாண். அப்போது அவர் தெரிவித்த கருத்து யதார்த்தத்திற்கு முரணாக இருந்ததால் தமிழ்நாட்டில் இருந்து அரசியல் கட்சிகள் அவருக்கு பதில் அளித்தனர். இந்நிலையில் மதுரையில் நேற்று அதாவது ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பவன் கல்யாணின் பேச்சுக்கு ப்ளூ சட்டை மாறன் காட்டமான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாண்: மாநாட்டில் பவன் கல்யாண் பேசும்போது, " நான் 14வது வயதில் சபரிமலைக்குப் போனவன். தை பூசத்திற்கு திருத்தணிக்கு போகிறவர்களை பார்த்தவன். சென்னை மயிலாப்பூரில் படுத்தபோது நெற்றியில் பட்டையுடன் பள்ளிக்கு போனவன். அடுத்த 10 ஆண்டுகளில் நெற்றியில் விபூதி பூசுவதை கேள்வி கேட்டார்கள். இந்த கேள்விகளை நான் எனது 14 வது வயதிலேயே எதிர் கொண்டவன். இதை பெரிது படுத்த வேண்டாம். காரணம் இந்துக்கள் மதச் சார்பற்றவர்கள்.
சீண்டி பார்க்காதீங்க: ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்தவராக இருக்கலாம், ஒரு இஸ்லாமியர் இஸ்லாமியராக இருக்கலாம், ஆனால் ஒரு இந்து இந்துவாக இருந்தாலே இவர்களுக்கு பிரச்னை. ஒரு இந்து இந்துவாக இருந்துவிட்டால் அவன் மதவாதி என்பதுதான் இவர்களின் போலி மதச்சார்பின்மை. முருகனைப் பற்றி கேள்வி கேட்கும் உங்களால் அரேபியாவில் இருந்து வந்த மதங்கள் குறித்து கேள்வி கேட்க முடியுமா? அதற்கான துணிச்சல் உங்களுக்கு உண்டா? அதனால் சொல்கிறேன் சீண்டி பார்க்காதீர்கள்" என்று பேசினார்.
ப்ளூ சட்டை மாறன் எச்சரிக்கை: இவரது பேச்சுக்கு பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பவன் கல்யாணின் பேச்சுக்கு தனது ஸ்டைலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது, " உங்க டீயை உங்க மாநிலத்துலயும், வட நாட்டுலயும் போய் ஆத்துங்க தம்பி. அடிக்கடி இங்க வந்து மதவாத பஞ்ச் பேசாதீங்க. சுடு தண்ணிய புடிச்சி மூஞ்சில ஊத்துற டீ மாஸ்டர்கள் இங்க ஏராளம்" என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











