‘பாம்பு சட்டை’ மூலம் ஹீரோவாகிறார் பாபி சிம்ஹா
சென்னை: வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா பாம்பு சட்டை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.
காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, சூது கவ்வும் உள்ளிட்ட படங்களில் முக்கிய குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் பாபி சிம்ஹா. அதனைத் தொடர்ந்து நேரம், ஜிகிர்தண்டா உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான வில்லனாக தோன்றி பாராட்டுகளை அள்ளினார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
திறமையான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றுள்ள பாபி சிம்ஹா, தற்போது பாம்பு சட்டை என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

பாம்பு சட்டை...
‘பாம்பு சட்டை'யை இயக்குனரும் தயாரிப்பாளருமான மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் மற்றும் ஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிபன் ஆகியோரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

அறிமுக இயக்குநர்...
இயக்குநர் சங்கரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஆடன் தாசன் இப்படத்தை இயக்குகிறார். இப்பட நாயகன் வேடம் பாபி சிம்ஹாவிற்கு கச்சிதமாக பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பாடல்கள்...
மேலும், இப்படத்தின் மூலம் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றிபெற்ற அசீஸ் அசோக் இசையமைப்பளராக அறிமுகமாகிறார். பாடல்களை வைரமுத்து, மதன் கார்க்கி மற்றும் விவேகா எழுதுகின்றனர்.

இரண்டு நாயகிகள்...
இப்படத்தில் பாபி சிம்ஹா வாட்டர் கேன் போடும் பையனாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கதைப்படி அவருக்கு இரண்டு நாயகிகளாம். ஆனால், இன்னும் நாயகிகள் பெயர் முடிவாகவில்லை எனத் தெரிகிறது.

கோடை ரிலீஸ்...
முதல்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. சமூக சிந்தனை அம்சங்கள் கலந்த காமெடி படமான, இப்படத்தை வரும் கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications