வாட்ச் மேன்.. படுவா.. கவுண்டமணி செந்திலை வைத்து காமெடி என K.S. ரவிக்குமார் கொட்டிய வன்மம்!
சென்னை: தமிழ் சினிமா கதையாக, காட்சிகளாக படமாக ஏன் படத்தின் டைட்டிலிலேயே கூட சில சாதியின் பெருமையைப் பேசுகிறேன் என மாற்று சமூகத்தினரை கேவலமாக சித்தரித்த பல படங்களை பட்டியலிட முடியும். அதே நேரத்தில் காட்சிகளைப் போல, வசனங்கள், பாடல்கள் என பலவற்றை ஆணை விட பெண் பலவீனமானவர், நகையாடுவதற்கு உரியவர் என்ற மனநிலையில் தமிழ் சினிமாவில் இன்னும் தீராத நோயாக உள்ளது.
இது போன்ற விஷயங்களை எதிர்க்க வில்லை என்றாலும், இவற்றைத் தவிர்த்து விட்டு வெளியாகி வெற்றி பெற்ற பல படங்களும் இயக்குநர்களும், நடிகர்களும் உள்ளார்கள். ஏற்கனவே நமது பிலிமி பீட் தளத்தில் எழுதி வருகிறோம். அந்த வரிசையில் இந்த தொகுப்பில் கடந்த 1992ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான படமான ஊர் மரியாதை படத்தில் இடம் பெற்ற நகைச்சுவக் காட்சிகளில் உருவக்கேலி, சாதிய கேலி உள்ளிட்டவை எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் காணலாம்.
இந்த படத்தின் பிரதான நகைச்சுவை நடிகர்கள் என்றால் அது, கவுண்டமணி மற்றும் செந்தில் தான். படத்தின் தொடக்கத்தில் உள்ள நகைச்சுவை காட்சிகள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கவுண்டமணியிடம் செந்தில் அடி வாங்கினால், திட்டு வாங்கினால் ரசிகர்கள் சிரிக்கிறார்கள் என்பதற்காக, அவர்களின் நகைச்சுவைக் காட்சிகளை இயக்கும்போது கே.எஸ். ரவிக்குமார் வாயிக்கு வந்த வார்த்தைகளைப் போட்டு திட்ட சொல்லியிருப்பார் போல. படம் முழுக்க வரும் நகைச்சுவைக் காட்சிகளில், வாட்ச்மேனாக வேலைக்கு வரும் குமரிமுத்துவைப் பார்த்து வாட்ச் மேன் எதுக்குடா சேர்ல உட்கார்ந்த, வாட்ச் மேன் வெளியே வாசலில் உட்கார வேண்டிய நாய்.. படுவா.. எந்திரிடா.. சேரைத் துடை" என்று பேசுவார். இதில் படுவா என அவர் பயன்படுத்தியுள்ள வார்த்தை ஒரு சமூக மக்களைக் குறிக்கக் கூடிய சொல்.
படுவா - படவா: அதே நேரத்தில் தமிழில் படவா என்று இருக்கக்கூடிய சொல்லைத்தான் கவுண்டமணி படுவா என்று என்று சொல்லுகிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. படவா என்றால் போக்கிரி, பொறுக்கி, விபச்சாரி, விபச்சாரியைக் கொண்டு வியாபாரம் செய்பவர் என்றும் பொருள் உள்ளது. இதற்கு அர்த்தம் தெரிந்து தான் கே.எஸ். ரவிக்குமார் தனது படத்தில் பயன்படுத்த சம்மதித்தாரா என்று தெரியவில்லை. மேலும், படுவா என்ற சமூகத்தினர் வங்காளா விரிகுடாவை ஒட்டிய மாநிலங்களான ஒரிசா தொடங்கி மேற்கு வங்காளம் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அளவீட்டில் கணிசமானவர்களாகவும் இந்து மற்றும் முஸ்லீம் மதங்களிலும் இருக்கிறார்கள். இவர்கள் கைவினைப் பொருட்கள் செய்வதை வைத்து அடையாளம் காணப்படுகிறார்கள். அதில் முஸ்லிமாக இருப்பவர்கள் இந்துவாக இருந்து மதம் மாறியவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

உருவக்கேலி: மற்றொரு காட்சியில் கவுண்டமணி செந்திலைப் பார்த்து, ஆப்பிரிக்க குரங்கு என்கிறார். தன்னிடம் 20 எருமை மாடுகள் இருக்கிறது என்று கூறும்போது, செந்தில் தன்னை ஞாபகப்படுத்துகிறார், உடனே கவுண்டமணி 21 எருமை மாடுகள் என்கிறார். இந்த காட்சியில் உடல் பருமனாக இருக்க கூடியவர்களை எருமை மாடு என வகைப்படுத்தலாம் என்ற உருவக்கேலி நகைச்சுவைதான்.
விச வார்த்தைகள்: கவுண்டமணி படம் முழுவதும் சில வார்த்தைகளை நகைச்சுவை என்ற பெயரில் விச வார்த்தைகளை வீசி விட்டுச் செல்கிறார், அதாவது, நாத்தம் பிடிச்ச பையன், அவங்க அப்பனுக்கு கண்ணு ஒன்ரை, இதுக்கு ஒன்னே முக்கால், உன் வாட்ச்மேன் புத்தி உன்னை விட்டு போகலையே, அந்த ஒன்னே முக்கால் தலையை என்னை விட்டு போனதுல இருந்து அடிக்கறதுக்கு ஆள் இல்லாமல் கையெல்லாம் அரிக்குது, பைத்தியக்காரி, லூசு பொண்டாட்டி, இந்த ஊர்ல இருக்குற அம்புட்டு பயலும் கருவா நாயா தான் இருக்கு.. நான் எந்த நாய்கிட்ட போய் கேட்கிறது" என்றெல்லாம் பேசுகிறார்.

ஆதிக்க மனநிலை: கவுண்டமணி இந்த படத்தில் மட்டுமல்லாமல் அவரது பெரும்பான்மையான படங்களில் உருவக்கேலியை முன்னிறுத்தியே தனது நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கியுள்ளார். அதே நேரத்தில் பல படங்களில் படுவா, பரதேசி போன்ற சொற்களை வசைச் சொற்களாகவே பயன்படுத்தியுள்ளார் என்பது வேதனைக்குரியது தான். பெண்களை குறைத்து மதிப்பிடும் வசனங்களைப் போகிற போக்கில் பேசுவது என இவரது பல நகைச்சுவக் காட்சிகளை டீகோட் செய்தால் அவை நகைச்சுவை இல்லை வன்மத்தின் வெளிப்பாடு, ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்பது புரியவரும்.


Click it and Unblock the Notifications











