நக்கல் மன்னன்னு பெயரெடுத்த கவுண்டமணி.. உருவக்கேலி செய்யாமல் காமெடி வராது போல..
சென்னை: தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களில் கவுண்டமணிக்கு எப்போதுமே சிறப்பு மிக்க இடம் உள்ளது. இவரது பல காமெடிகள் இன்றைய தலைமுறையினரையும் கவர்ந்திழுக்கும் விதமாக உள்ளது. ஆனால் கவுண்டமணி தனது காமெடி காட்சிகளில் பல இடங்களில் உருவக்கேலி வசனங்களைப் பேசியுள்ளார். அதேபோல் ஆணாதிக்க மனநிலையில் இருந்து வெளிப்படும் வசனங்களையும் அவர் பேசியுள்ளார். அதில் கடந்த 1992ஆம் ஆண்டு இயக்குநர் ஈரோடு சௌந்தர் இயக்கத்தில் வெளியான முதல் சீதனம் படத்தின் நகைச்சுவை காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள உருவக்கேலி மற்றும் ஆணாதிக்க வசனங்களைக் காணலாம்.
முதல் காமெடியிலேயே, மூஞ்சூறு, உங்க அப்பன் உனக்கு பெயர் வைத்தான் பாரு நல்லா பெருச்சாளிக்கு வைத்தது போல, உங்க மூஞ்சிகளை எல்லாம் பார்த்தால்தான் ஜன்னி வருகிறதே என்று கூறுகிறார். நடிகர் செந்திலை அறிமுகம் செய்து வைக்கும் காட்சியில், செந்தில் கண்ணாடி போட்டுக் கொண்டு வருகிறார். அவரைப் பார்த்ததும் கவுண்டமணி மனதில் ஒரு எருமை மாடு கண்ணாடி போட்டுக் கொண்டு வருவது போல யோசித்துப் பார்ப்பது போன்ற காட்சியை இயக்குநர் வைத்துள்ளார். இந்த காட்சியெல்லாம் உருவக்கேலியின் உச்சம்.
யார் யார் கண்ணாடி போட வேண்டும், யார் யார் கண்ணாடி போடக்கூடாது, கண்ணாடி போடுவதற்கு ஒரு நிறத் தோற்றம் வேண்டும் எனக் கூறும் முட்டாள்தனமான ஆதிக்க மனநிலை. ஏன் செந்திலைப் போன்ற உருவ ஒற்றுமை உள்ளவர்கள் கண்ணாடி போடக்கூடாதா? நகைச்சுவைக்காக இப்படியான காட்சியை அமைத்தோம் என படக்குழு இதற்கு பதில் தரலாம். ஆனால் சினிமா போன்ற தளத்தில் காண்பிக்கப்படும் காட்சிகள், பேசப்படும் வசனங்கள் சமூகத்தில் நேரடியாக தாக்கத்தையும் வினை மற்றும் எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடியது என புரியாமலா அவர்கள் படம் எடுத்திருப்பார்கள்.

மிருகங்களுடன் ஒப்பீடு: செந்திலைப் பார்த்து மறுபடியும் பார்க்கிற மூஞ்சியாடா அது, இந்த மூஞ்சியை அழகன்னு பெயர் வைத்திருக்கிறானே உன் அப்பனுக்கு என்ன இரண்டு கண்ணுமே குருடா எனக் கேட்டுவிட்டு வாந்தி எடுப்பதுபோல் செய்கிறார் கவுண்டமணி, பன்னாடைக்கு பொறந்தவனே, பரதேசிக்கும் பண்ணாடைக்கும் பொறந்த நாய், எந்த கீரிக்கு பொறந்தவன் கிள்ளினான்? முண்டை நாயே, கருவா நயே எனக் கூறுகிறார். படம் முழுவதும் நீளும் கவுண்டமணி செந்தில் காமெடி காட்சிகளில் உருவக்கேலி இல்லாத, வசைச் சொற்கள் இல்லாத நகைச்சுவைக் காட்சிகளே இல்லை.
ஆதிக்க மனநிலை: இப்படியான வசனங்களை நடிகர்கள் திரையில் பேசினால் மக்கள் சிரிப்பார்கள் என்ற நம்பிக்கை இந்தியா போன்ற சாதிய மனநிலை, ஆதிக்க மனநிலை கொண்ட நாட்டில் படம் இயக்குநர்கள் மத்தில் எழுவதைப் பார்த்து அதிர்ச்சியோ, ஆச்சரியமோ இல்லை. மேலும் இந்த வசனங்களை பார்த்து, ஏதோ நாகரீகமற்ற கூட்டத்தை போல் கைதட்டி சிரித்து, காமெடி என்றாலே கவுண்டமணி - செந்தில்" தான் என பாராட்டித் தள்ளிய சமூகத்தைப் பார்த்தும் ஆச்சரியம் எதுவும் இல்லை. காரணம் இந்த சமூகத்தில் இருந்து படம் எடுத்தவர்கள் தான் படக்குழுவினர்.



Click it and Unblock the Notifications











