பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா பாதிப்பு.. சீக்கிரம் குணமாக ரசிகர்கள் பிரார்த்தனை!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ராவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ரன்பீர் கபூருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
சமீபத்தில் தான் பிரம்மாஸ்த்திரா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடிகை ஆலியா பட் உடன் ரன்பீர் கபூர் கலந்து கொண்டார்.

கடந்த மார்ச் மாதம்
இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் தான் கொரோனா பாதிப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டு சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளும் மூடப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தை மக்கள் ஒரு வித பயத்துடனே அணுகி வருகின்றனர்.

மகாராஷ்ட்ராவில்
மீண்டும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவையை மீண்டும் நாடு முழுவதும் அனைவரும் பின் பற்ற வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிகளையும் மின்னல் வேகத்தில் அரசு போட்டு வருகிறது.

ரன்பீர் கபூருக்கு கொரோனா
நடிகர் ரன்பீர் கபூர் சில நாட்களாக வெளியே வராமல் இருந்து வந்த நிலையில், சில மீடியாக்கள் அணுகி கேள்வி எழுப்ப, ரன்பீர் கபூருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளதாக அவரது மாமா ரந்தீர் கபூர் பதில் அளித்துள்ளார். ரன்பீர் கபூர் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் அவரது உடல் நிலை சீராக இல்லை என்றும் கூறியுள்ளார்.

அம்மாவுக்கு கொரோனா
ரன்பீர் கபூரின் அம்மா நீத்து கபூர் சண்டிகரில் ஜக் ஜக் ஜியோ படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில், ரன்பீர் கபூருக்கு அவர் மூலமாக கொரோனா பரவி இருக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. #RanbirKapoor என்கிற ஹாஷ்டேக்கை போட்டு ரசிகர்கள் ரன்பீர் கபூர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ஆலியா பட் உடன்
ரன்பீர் கபூர் தனது காதலியான ஆலியா பட் உடன் இணைந்து நடித்து வரும் பிரம்மாஸ்த்திரா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. பெரிய காளி தேவியின் சிலைக்கு முன்பாக எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என இருவரும் இணைந்து வேண்டிக் கொண்டு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், மீண்டும் அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ளது.


Click it and Unblock the Notifications











