அமெரிக்கா செல்ல முடியவில்லை.. லாக்டவுன் காரணமாக இந்தியாவில் தங்கியிருந்த பிரபல நடிகர் திடீர் மரணம்!
மும்பை: லாக் டவுன் காரணமாக அமெரிக்கா செல்ல முடியாமல் இருந்த பிரபல நடிகர் மும்பையில் மரணமடைந்தார்.
பிரபல பாலிவுட் நடிகர் ரஞ்சித் சவுத்ரி (64). நாடக நடிகராக இருந்து சினிமாவுக்கு வந்தவர்.
இவரது தாய் பேர்ல் பாதம்ஸி, பிரபல நாடக நடிகர், நாடக ஆசிரியை. ரஞ்சித், இந்தியில், பல படங்களில் நடித்துள்ளார்.

காமசூத்ரா
கட்டா மிட்டா, குப்சூரத், காலியா, மீரா நாயரின் மிஸிஸிபி மசாலா, தீபா மேத்தாவின் பாலிவுட்/ஹாலிவுட் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தீபா மேத்தாவின் ஃபயர், மீரா நாயரின் காமசூத்ரா படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். கேட்டல் பிஷ், பிரேக்அவே, லாஸ்ட் ஹாலிடே உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

அமெரிக்கா
லாஸ்ட் ஹாலிடே படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது. பிரிசன் பிரேக், ஆபிஸ் உட்பட பல அமெரிக்க டிவி தொடர்களிலும் நடித்து வந்தார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் மனைவி மற்றும் 16 வயது மகனுடன் வசித்து வந்த ரஞ்சித் சவுத்ரி, பல் சிகிச்சைக்காக சில மாதங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்திருந்தார்.

சர்வதேச விமானம்
சிகிச்சை முடிந்த அவர், கடந்த 8 ஆம் தேதி அமெரிக்காவுக்குத் திரும்பி இருக்க வேண்டும். லாக்டவுன் காரணமாக சர்வதேச விமானங்கள் இயக்கப்படவில்லை. இதனால் மும்பையி லேயே அவர் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு குடல்புண் ஏற்பட்டது.

அறுவைச் சிகிச்சை
பரிசோதனை செய்த டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை காலை அவர் திடீரென மரணமடைந்தார் என்று பிரபல நாடக நடிகர் டோலி தாகூர் தெரிவித்துள்ளார்.

இறுதிச் சடங்கு
இதையடுத்து ரஞ்சித் சவுத்ரியின் இறுதிச் சடங்கு மும்பையில் நேற்று நடந்தது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நாடக பிரபலங்கள் கலந்துகொண்டனர். லாக்டவுன் காரணமாக அதிகமானோர் வெளியே வரக் கூடாது என்பதால் அவரது இறுதிச் சடங்கில் திரையுலகினர் கலந்துகொள்ள முடியவில்லை. பலர், சமூக வலைத்தளங்க்ளில் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











