ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் சாரா அர்ஜூன்..மகள் வயது நடிகையுடன் டூயட்டா.. கடுப்பான நெட்டிசன்ஸ்!
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி நந்தினியாக நடித்து நம் மனதில் இடம் பிடித்த சாரா அர்ஜூன், தற்போது பாலிவுட் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்க உள்ளார். அதுவும், ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக கமிட்டாகி உள்ளதால், கடுப்பான நெட்டிசன்கள் இணையத்தில் வசைபாடி வருகின்றனர்.
தமிழ் சினிமா எத்தனையோ குழந்தை நட்சத்திரங்களை பார்த்து இருக்கிறது. அவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைக்கும். அப்படி குழந்தை நட்சத்திரமாக திரையில் ஜொலித்து, பின் சினிமாவில் வலம் வந்தவர் நடிகை ஷாலினி. அதேபோல, குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்தர் தற்போது கதாநாயகியாக கலக்கி வருகிறார். அந்த வரிசையில் அப்போது பேபி சாரா அர்ஜூனும் இணைந்துள்ளார்.

நடிகை சாரா அர்ஜூன்: ஏல்.எல் விஜய் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்திருந்தார் சாரா. அப்பா மகள் பாசத்தை சொல்லும் இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சாராவின் எதார்த்தமான நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். அந்த சிறுவயதிலேயே தனது கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் பல்வேறு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார் சாரா.
குட்டி நந்தினி: தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு நிலாச்சோறு, சைவம், விழித்திரு, ஹலிதா சமீம் இயக்கிய சில்லுக்கருப்பட்டி போன்ற படத்தில் பேபி சாரா நடித்திருந்தார். அதன் பிறகு மலையாளம், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரத்தின் சிறுவயது நந்தினியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் ஒரு சில காட்சிகளில் வந்த போதும், அந்த கதாபாத்திரம் பேசும்பாடியாக இருந்தது.
சர்ச்சையான காட்சி: பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் கொட்டேஷன் கேங் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் பேபி சாரா புகைப்பிடிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தைப் பார்த்த பலர் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். இந்த படத்தில் பிரியாமணி, ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், விவேக் கண்ணன் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்தனை நாட்களாக பேபி சாராவாக இருந்து வந்த சாரா ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுக உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
மகள் வயது நடிகையுடன் டூயட்டா: இந்நிலையில், நடிகை சாரா அர்ஜூன் பாலிவுட்டில், ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதித்ய தார் இயக்கும் இப்படத்தில் ரன்வீருடன், சஞ்சய் தத், ஆர்.மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். சாரா அர்ஜூன் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கிறார் என்கிற தகவல் வெளியானதும் கடுப்பான நெட்டிசன்ஸ் ரன்வீர் சிங்கிற்கு என்ன வயது, சாராவிற்கு என்ன வயசாகிறது. மகள் வயது நடிகையுடன் டூயட்டா என அடுத்தடுத்து இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











