ஒரே நேர்க்கோட்டில் இணைந்த துருவங்கள்.. விஜய் -லோகேஷுடன் கைகோர்த்த சஞ்சய் தத்.. இதோ வீடியோ!
சென்னை : நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் லியோ.
காஷ்மீரில் நடைபெற்றுவரும் லியோ படத்தின் சூட்டிங்கை இந்த மாதத்திற்குள் முடிக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு அதன்படி சூட்டிங்கை அடுத்தடுத்து முடித்து வருகிறார்.
கடந்த வாரத்தில் மிஷ்கின் மற்றும் கவுதம் மேனன் உள்ளிட்டவர்களின் பாகங்கள் நிறைவடைந்து அவர்கள் சென்னை திரும்பியுள்ளனர். தொடர்ந்து சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோரின் பாகங்களும் அடுத்தடுத்து திட்டமிடப்பட்டு வருகின்றன.

லியோ படத்தின் சூட்டிங்
நடிகர் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் லியோ. கடந்த மாதத்தில் இந்தப் படத்தின் டைட்டில், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து காஷ்மீரில் 60 நாட்கள் சூட்டிங் பிளானுடன் தனி விமானத்தில் புறப்பட்டு சென்றது படக்குழு. தற்போது 40 நாட்கள் சூட்டிங் கடந்த நிலையில், இம்மாத இறுதிக்குள் காஷ்மீர் சூட்டிங்கை முடிக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளார்.

கேங்ஸ்டராக விஜய்
கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் காலை 9 மணிக்கு துவங்கப்படும் சூட்டிங் 5 மணிக்குள் நிறைவடையும்படி திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. படத்தில் கேங்ஸ்டராக நடித்து வருகிறார் விஜய். அவருடன் படத்தில் 6 வில்லன்கள் மோதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், முதல்கட்டமாக மிஷ்கின் மற்றும் கவுதம் மேனன் ஆகியோரின் போர்ஷன்கள் முடிக்கப்பட்டு அவர்கள் சென்னை திரும்பியுள்ளனர். தொடர்ந்து இன்றைய தினம் நடிகர் சஞ்சய் தத் லியோ சூட்டிங்கில் இணைந்துள்ளார்.

சிறப்பான வரவேற்பு
லியோ சூட்டிங்கில் பங்கேற்பதற்காக காஷ்மீர் வந்த சஞ்சய் தத்திற்கு சிறப்பான வரவேற்பை படக்குழுவினர் அளித்தனர். முன்னதாக விமானநிலையத்தில் கருப்பு நிற பேண்ட் சட்டையில் மிரட்டலாக வந்த அவரை கேமிரா கண்கள் சூழ்ந்துக் கொண்டன. ரசிகர்களுக்கும் அந்த புகைப்படங்கள் பகிரப்பட்டு வைரலாக்கப்பட்டன. தொடர்ந்து சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த சஞ்சய் தத்திற்கு நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்டவர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

விஜய்யை கட்டித்தழுவிய சஞ்சய் தத்
சஞ்சய் தத்தை வரவேற்ற நடிகர் விஜய், அவரை ஆரத்தழுவிக் கொண்டார். இந்த வீடியோவை தற்போது தயாரிப்புத்தரப்பு வெளியிட்டுள்ளது. நெருப்பாக சஞ்சய் தத், சூட்டிங்கில் பங்கேற்க வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் எக்ஸ்க்ளூசிவ் விடியோ வேணும்னு கேட்டீங்களாமே, எங்களுக்கு கேட்டுருச்சு என்றும் கேப்ஷனில் தெரிவித்துள்ளது. சஞ்சய் தத் விமானத்தில் வந்தது முதல், சூட்டிங்கில் பங்கேற்க கிளம்பியது வரை இந்த வீடியோவில் அடுத்தடுத்து காணப்படுகிறது.

விஜய் 67 படம்
விஜய்யின் 67வது படமாக உருவாகிவருகிறது லியோ படம். இந்தப் படத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஜய் -த்ரிஷா ஜோடியும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை நீட்டித்துள்ளது. விக்ரம் படத்தின் அதிரி புதிரி வெற்றிக்கு பிறகு இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிக மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் படத்தின் சிறிய அப்டேட்டும் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்து வருகிறது.

க்யூட் த்ரிஷா
படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ள த்ரிஷா, அவ்வப்போது படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், அவர் தனிப்பட்ட முறையில் படக்குழுவினருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. நேற்றைய தினம் குரங்குகளுக்கு அவர் பழங்கள் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











