மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டம்.. மோடியுடன் செல்ஃபி எடுத்த பாலிவுட் பிரபலங்கள்!
டெல்லி: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து பாலிவுட் பிரபலங்களுடன் டெல்லியில் மோடி கலந்துரையாடினார்.
அப்போது, அமீர்கான், ஷாரூக்கான் என முன்னணி நடிகர்கள் மற்றும் கங்கனா ரனாவத், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நடிகைகளும் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
மகாத்மா காந்தியின் கொள்கைகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் திரைத்துறை சிறப்பாக செயல்படுவதாக மோடி புகழாரம்.

காந்தி 150
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலிவுட் நடிகர்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையினருடன் பிரதமர் மோடி நேற்று இரவு கலந்து ஆலோசனை நடத்தினார். காந்தியின் கொள்கைகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் திரைத்துறை சிறந்த பணியாற்றுவதாக மோடி பாராட்டினார்.

கான்களுடன் செல்ஃபி
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர்கான் மற்றும் ஷாரூக்கானுடன் பிரதமர் மோடி செல்ஃபி எடுத்துக் கொண்டார். நடிகர் அமீர்கான் எடுத்த அந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

மோடிக்கு பாராட்டு
நிகழ்ச்சியில் பேசிய அமீர்கான், மகாத்மா காந்தியின் அறவழி போதனைகளை உலகிற்கு கொண்டு செல்வதில் பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாக கூறினார். அமீர்கானை தொடர்ந்து பேசிய ஷாரூக்கான், இந்தியாவிற்கும், உலகிற்கும் காந்தியை மீண்டும் நினைவு படுத்தவேண்டிய தருணம் இது என தனது கருத்தைக் கூறினார்.

பாலிவுட் நடிகைகளுடன் செல்ஃபி
பிரதமர் மோடியுடன் ஷாரூக்கான் மற்றும் அமீர்கான் செல்ஃபி எடுத்துக் கொண்டதை தொடர்ந்து பாலிவுட் நடிகைகளான கங்கனா ரனாவத், ஜேக்குலின் ஃபெர்ணாண்டஸ், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நடிகைகள் ஆர்வமாக மோடியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இந்த விழாவில் எஸ்.பி. பாலசுப்ரமணியம், சோனம் கபூர், ஜாக்கி ஷெராஃப், போனி கபூர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











