விஜய் பட நாயகி இலியானாவுக்கு தமிழில் நடிக்கத் தடையா... இதுதான் முழுமையான காரணமா..?
மும்பை: தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா.
ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் ரியா என்ற கேரக்டரில் நடித்து கோலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாக மாறினார்.
ஆனால், அதன்பிறகு பாலிவுட் பக்கம் சென்ற இலியானா தமிழ்ப் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், மீண்டும் தமிழில் ஒரு படம் நடிக்கவிருந்த இலியானாவுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேடி நாயகி இலியானா
இந்தியாவில் பிறந்த போர்த்துக்கீசிய நடிகை என்ற பெருமைக்குரியவர் இலியானா. 2006ம் ஆண்டு தமிழில் வெளியான கேடி திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் தேவதாஸ், மகேஷ்பாபுவுடன் போக்கிரி என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் டோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்த இலியானா, விஜய்யின் நண்பன் படம் மூலம் மீண்டும் கோலிவுட் பக்கம் வந்தார்.

கோலிவுட்டில் நடிக்க தடை?
ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த நண்பன் படத்தில் ரியா கேரக்டரில் நடித்திருந்தார் இலியானா. சத்யராஜின் மகளாகவும் விஜய்யின் காதலியாகவும் காமெடி ப்ளஸ் ரொமான்ஸ் செய்த இலியானா, ரசிகர்களின் கனவுக் கன்னியாக கொண்டாடப்பட்டார். ஆனால், அதன்பிறகு கோலிவுட் பக்கம் முகம் காட்டாமல் இருந்த இலியானாவுக்கு தற்போது தமிழ்ப் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதிர்ச்சியில் ரசிகர்கள்
2012ல் பர்ஃபி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இலியானா, தொடர்ந்து மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். அடுத்தடுத்து இந்தியில் நடித்து வரும் இலியானாவுக்கு இன்னும் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் கோலிவுட் வர முடிவு செய்த இலியானா, தமிழ் தயாரிப்பாளர் ஒருவருக்கு கால்ஷீட் தருவதாகக் கூறி அட்வான்ஸும் வாங்கிவிட்டதாக தெரிகிறது. ஆனால், இன்னும் தேதி ஒதுக்காமல் தண்ணிக் காட்டி வருகிறாராம்

தடை விதிக்க முடிவு
இதனையடுத்து, இலியானாவுக்கு அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர், தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் முறையிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய படங்களில் நடிக்க இலியானாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து இலியானா தரப்பில் இருந்து இதுவரை எதுவும் விளக்கம் கொடுக்கவில்லை என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











