மாநாடு ரீமேக் உரிமையை பெற கடும் போட்டி... பெத்த தொகையுடன் காத்திருக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்!
சென்னை: சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள மாநாடு படம் வசூலை குவித்து வரும் நிலையில் அப்படத்தின் ரீமேக் உரிமையை பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'மாநாடு'. இந்தப் படத்தில் எஸ் ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மாநாடு படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

வசூலை குவிக்கும் மாநாடு படம்
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் பல தடைகளை தாண்டி கடந்த 25ஆம் தேதி வெளியானது. முதல் நாளே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது மாநாடு திரைப்படம். படம் ரிலீஸ் ஆன முதல் 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 22 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக்
மாநாடு படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் சிம்பு, வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா என படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மாநாடு திரைப்படம் நடிகர் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் என்றும் கூறி வருகின்றனர் ரசிகர்கள்.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்
இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. 'மாநாடு' படம் வெளியான மறுநாள் படத்தைப் பார்த்த பாலிவுட்டின் முன்னணித் தயாரிப்பாளர் ஒருவர் ஒரு பெரும் தொகை கொடுத்து படத்தின் ரீமேக் உரிமையைப் பெற முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
Recommended Video

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதேபோல் மாநாடு படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பெறவும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரங்களில் நடிக்க முன்னணி நடிகர்கள் இருவரிடம் பேச்சுவார்த்தையும் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











