Dhanush - தனுஷை வைத்து இளையராஜா பயோபிக்.. செம ப்ளான் போட்டிருக்கும் பாலிவுட் இயக்குநர்
மும்பை: Dhanush (தனுஷ்) தனுஷை வைத்து இளையராஜா பயோபிக்கை எடுக்க ஆசையிருப்பதாக பாலிவுட் இயக்குநர் பால்கி தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். கடந்த சில வருடங்களாகவே தோல்வி படங்களை கொடுத்து வந்த அவர் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலமாக வெற்றி பாதைக்கு திரும்பினார். இதனால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு வாத்தி படத்தில் நடித்தார். அது அவரை மீண்டும் தோல்வி பாதைக்கு அழைத்து சென்றிருக்கிறது.

கேப்டன் மில்லர்: இந்தச் சூழலில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ப்ரியங்கா அருள்மோகன், சிவராஜ்குமார், ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். நிச்சயம் கேப்டன் மில்லர் மீண்டும் தனுஷுக்கு வெற்றி முகத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
தனுஷ் 50: கேப்டன் மில்லர் படத்துக்கு பிறகு தனது 50ஆவது படத்தை தானே இயக்கி நடிக்கிறார் தனுஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்துக்கு செட் போடும் பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. விரைவில் ஷூட்டிங் தொடங்குகிறது. இதில் அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன்,காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு பிறகு சேகர் கம்முலா படத்தில் நடிக்க அவர் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பால்கி பேட்டி: இந்நிலையில் ஹிந்தியில் தனுஷை வைத்து ஷமிதாப் படத்தை இயக்கிய பால்கி சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "தனுஷ் ரொம்பவே எளிமையானவர். என்ன செய்ய வேண்டுமென்று அவருக்கு நன்றாகவே தெரியும். அவரை இயக்கும்போது ஆம், இல்லை என்பதற்கு தலையை அசைத்தால் போதும் அதை புரிந்துகொண்டு வேறு மாதிரி செய்துகொடுப்பார்.
நடிகர் மட்டுமல்ல: தனுஷ் நடிகர் மட்டுமில்லை இந்தியாவின் நல்ல எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளரும் கூட. அவருடைய நடிப்புக்கு மட்டும் ரசிகனாக இருந்தேன். இப்போது அவரது எழுத்துக்கும், இயக்கத்துக்கும் ரசிகனாக மாறிவிட்டேன். ஒவ்வொரு முறை அவரை பார்க்கும்போதும் எப்படி இவ்வளவு எளிதாக எழுதுகிறீர்கள் என கேட்பேன். அதற்கு அவரோ இயற்கையாகவே எனக்கு வருகிறது என்பார்.
இளையராஜா பயோபிக்: என்னுடைய கனவு என்பதே இளையராஜாவின் வாழ்க்கை வரலாறை தனுஷை வைத்து இயக்குவதுதான். அப்படி நடக்கும்பட்சத்தில் அவருக்கு நான் கொடுக்கப்போகும் பெரிய பரிசு அதுவாகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் என்னைப்போலவே அவரும் இளையராஜாவின் தீவிரமான ரசிகர்" என்றார். பால்கியின் இந்தப் பேட்டியை பார்த்த சீக்கிரம் இளையராஜா வாழ்க்கை வரலாறை பால்கி எடுக்க வேண்டும் அதில் தனுஷ் நடிக்க வேண்டும் என கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











