மறைந்தாலும் மறக்காத ரசிகர்கள்.. சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் சுஷாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்!
மும்பை: மறைந்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் 35வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பாலிவுட்டையே சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை அதிர வைத்தது.
அவரது மரணத்தில் சந்தேகம் கிளம்பிய நிலையில், சிபிஐ விசாரணை இன்னமும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

35வது பிறந்தநாள்
1986ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி பாட்னாவில் பிறந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பாலிவுட் பின் புலங்கள் எதுவுமின்றி பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகராக குறைந்த காலத்திலேயே கோலோச்சிய சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

மரணத்தில் சந்தேகம்
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வெடித்த சர்ச்சை, பாலிவுட்டை ஒட்டுமொத்தமாக பதம் பார்த்தது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தை திட்டமிட்டு கொலை செய்து விட்டனர் என்றும், மன அழுத்தம் கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டினர் என்றும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சிக்கிய காதலி
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியான ரியா சக்கரவர்த்தி தான் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு காரணம் என சுஷாந்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், சுஷாந்தின் பணத்தையும் அவர் கைப்பற்றினார் என்கிற குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர்.

போதைப் பொருள் விவகாரம்
ரியா சக்கரவர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் போதைப் பொருள் விவகாரம் பாலிவுட்டில் தலைவிரித்து ஆடியது அம்பலத்துக்கு வந்தது. ரியாவின் தம்பி சோவிக் சக்கரவர்த்தி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். மேலும், நடிகை தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாரா அலி கான் உள்ளிட்டோரும் விசாரணை வளையத்தில் சிக்கினர். பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் விடுவிக்கப்பட்டார்.

மறக்காத ரசிகர்கள்
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தின் மர்மம் இன்னமும் தொடர்கதையாக இருக்கும் நிலையில், அவரது 35வது பிறந்தநாளை ரசிகர்கள் #SushantDay என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி மறக்காமல் இன்னும் கொண்டாடி வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் அழகிய சிரிப்பு அடங்கிய புகைப்படங்களையும், அவர் நடித்த படங்களின் காட்சிகளையும் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

மாறாத அன்பு
சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று நம்மோடு இல்லை என்றாலும், அவரது நினைவுகள் எப்போதும் நம்முடனே இருக்கும் என ஏகப்பட்ட ரசிகர்கள் சுஷாந்தை நினைத்து பல விஷயங்கள் செய்து வருகின்றனர். சிலர், தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்து, அவருக்கு இன்றைய தினம் பிடித்ததை எல்லாம் செய்து சுஷாந்தை நினைத்து வருவதை எல்லாம் யாராலும் மாற்ற முடியாது.


Click it and Unblock the Notifications











