கல்கி, தங்கலான், வாழைக்கு வேட்டு வைத்த இந்தி படம்.. ஆஸ்கர் போட்டிக்குச் செல்லும் லாபதா லேடீஸ்!
சென்னை: திரைத்துறையின் உயரிய விருதாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது ஆஸ்கர் விருதுகள். இந்த விருதை வாங்குவது அனைவருக்குமே வாழ்நாள் கனவாக இருக்கும். இதை ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் சாத்தியப்படுத்தியுள்ளனர். இருந்தபோதிலும் இந்த ரேஸில் பங்கேற்கும் முயற்சியில் ஆண்டுதோறும் தமிழ், மலையாள மொழிப்படங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
96வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி டால்பி திரையரங்கில் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருது விழாவிற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி இந்த விருதுகள் வழங்கும் விழா நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருதுகள்: சினிமாவின் அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் வாழ்நாள் கனவாக ஆஸ்கர் விருதுகள் காணப்படுகின்றன. இதை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் சாத்தியப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி 96வது ஆஸ்கர் விருதுகள் விழா மிகவும் பிரம்மாண்டமாக சிவப்பு கம்பள வரவேற்புடன் நடத்தப்பட்டன. இதில் ஓப்பன்ஹெய்மர் படம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதுகளை வென்றது. எம்மா ஸ்டோன் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றிருந்தார். இதில் புவர் திங்ஸ் படமும் பல விருதுகளை வென்றது.
97வது ஆஸ்கர் விருது விழா: இந்நிலையில் தற்போது அடுத்ததாக 97வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவிற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. மார்ச் மாதம் 2ம் தேதி இந்த ஆண்டை காட்டிலும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இந்த விருதுகள் வழங்கும் விழா நடக்கவுள்ளதாக அகாடமி ஆஃப் மோஷன் பிக்ஷர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் மற்றும் ஏபிசி அறிவித்துள்ளன. இதற்கான பரிந்துரைகள் வரும் ஏப்ரல் 10ம் தேதி நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா டால்பி திரையரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லாபடா லேடீஸ் படம் தேர்வு: இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து லாபடா லேடீஸ் படம் சிறந்த அயல்நாட்டு படத்திற்கான கேட்டகரியில் பங்கேற்க தேர்வாகியுள்ளது. தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இருந்து மொத்தம் 29 படங்கள் இதில் என்ட்ரி ஆன நிலையில், இந்திய ஃபிலிம் பெடரேஷன், லாபடா லேடீஸ் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. தமிழிலிருந்து தங்கலான், வாழை, கொட்டுக்காளி, மகாராஜா, ஜமா மற்றும் ஜிகர்தண்டா என 6 படங்கள், தெலுங்கில் கல்கி உள்ளிட்ட 3 படங்கள், மலையாளத்தில் உள்ளொழுக்கு, ஆடு ஜீவிதம் உள்ளிட்ட 4 படங்கள், இந்தியில் லாபடா லேடீஸ், ஆர்ட்டிகள் 370 உள்ளிட்ட 12 படங்கள் மற்றும் தெலுங்கு, ஒடியா, மராத்தி மொழிப்படங்களும் இந்த ரேஸில் பங்கேற்றன.
தங்கலான், வாழை படங்களை பின்னுக்கு தள்ளியது: ஆனால் தற்போது கல்கி, தங்கலான், வாழை உள்ளிட்ட படங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்த ரேஸில் லாபடா லேடீஸ் படம் அயல்நாட்டு படத்திற்கான தேர்வில் தேர்வாகியுள்ளது. அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். முதலில் திரையரங்கில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற இந்தப் படம் பிறகு ஓடிடியிலிம் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நித்தன்ஷி கோயல், ஸ்பார்ஷ் ஸ்ரீவத்சவ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தன்னுடைய முன்னாள் கணவர் அமீர்கானுடன் இணைந்து கிரண் ராவ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











