உலகின் பழமையான மொழி சமஸ்கிருதமா? உருதா? இவற்றுக்கு எல்லாம் மேலே ஒரு மொழி இருக்கு.. பாலிவுட் கவிஞர் பளிச்
மும்பை: உலகம் முழுவதும் மொழி என்பது மிகவும் முக்கியமான ஒரு விவாதமாக தொடங்கி, பெரும் புரட்சிகளுக்கு வித்திட்டுள்ளது. இரண்டு முதல் சுமார் 10 மொழிகள் புழங்கும் நாடுகளிலேயே அவ்வப்போது பெரும் சர்ச்சைகள் மொழிக்காக நடைபெற்றுள்ளது. இந்தியா போன்ற நாட்டில் ஒரு மொழிக்காக ஜன நாயகப் போர் தொடங்கி அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் போர் நடத்திய மண் தமிழ்நாடு, நடத்தியவர்கள் தமிழர்கள். உலகிலேயே பழமையான மொழி என்று தமிழர்கள் தங்கள் மொழியை தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள் என்று ஆங்காங்கே சிலர் வினவிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், தமிழ் மொழி அல்லாத மாற்று மொழியைச் சேர்ந்த மொழியியல் அறிஞர்கள் பலரும் தமிழ்தான் உலகின் மூத்த மொழி, மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி என்று தெரிவித்துள்ளார்கள்.
எது பழமையான மொழி? எது மூத்த மொழி? என பல கேள்விகளை தமிழ் அல்லாத வேறு சில மொழிகளுக்கு இடையில் விவாதங்கள் நடைபெற்றால் கூட, விவாதத்தில் ஈடுபடும் அறிஞர்களால் தமிழை தவிர்த்துவிட்டு விவாதம் நடத்தவே முடியாது. அப்படியான ஒரு சம்பவம் தான் பாலிவுட் திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்றுள்ளது.

பழமையான மொழி: அதாவது, பாலிவுட்டின் புகழ் பெற்ற மூத்த கவிஞரும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் பெரும் கவனத்தையும் விவாதத்தையும் உருவாக்கி உள்ளது. அதாவது ரசிகர் ஒருவர், சமஸ்கிருதம் மற்றும் உருது ஆகிய மொழிகளில் எது பழமையான மொழி என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ் மொழி: இந்த கேள்விக்கு பளிச்சென்று ஜாவேத் அக்தர் அளித்த பதிலால் மொத்த அரங்கமும் ஆடிப் போனது எனலாம். அதாவது சமஸ்கிருதத்தின் தங்கை என்று உருது மொழியைக் கூறலாம். சமஸ்கிருதம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான மொழி. ஆனால் உருது மொழியானது சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இவற்றை எல்லாவற்றையும் விட மிகவும் பழமையான மொழி ஒன்று உள்ளது. அது தமிழ் மொழி. தமிழ் தான் மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி" என்று பதில் அளித்தார். இவரது இந்த பதில் தற்போது பாலிவுட் வட்டாரத்தைக் கடந்து, அரசியல் தளத்திலும் விவாதத்தை கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











