விலா எலும்பு உடைந்தது .. படுகாயம் அடைந்த அமிதாப் பச்சன்.. படப்பிடிப்பில் நடந்தது என்ன?
ஹைதராபாத் : ப்ராஜெக்ட் கே படப்பிடிப்பு தளத்தில் சண்டை காட்சியின் போது நடிகர் அமிதாப் பச்சன் படுகாயம் அடைந்தார்.
நடிகையர் திலகம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ப்ராஜெக்ட் கே.
இப்படத்தில், பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ப்ராஜெக்ட் கே
மிக பிரம்மாண்டமாக அதிக பொருட் செலவில் உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே படத்தை அஸ்வின் தத் தயாரித்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்தன. இதில் தீபிகா படுகோன், பிரபாஸ், அமிதாப் பச்சன் சம்பந்தப்பட்ட ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில், பிரபாஸ் மற்றும் அபிதாப் பச்சனின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.

இடுப்பு விலா எலும்பு உடைந்து
இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சனுக்கு படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டு ஹைதராபாத் ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இடுப்பு விலா எலும்பு உடைந்து, தசைநார் கிழிந்துள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, விமானம் மூலம், அமிதாப் பச்சன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அமிதாப் பச்சன் ட்வீட்
இதுகுறித்து, அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில்,ஹைதராபாத்தில் ப்ராஜெக்ட் கே படப்பிடிப்பில், ஒரு சண்டை காட்சியின் போது, எனக்கு காயம் ஏற்பட்டது. ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் வீடு திரும்பினேன். எனது விலா எலும்பு உடைந்து விட்டதாகவும், தசை கிழிந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் ஓய்வில் இருக்கும் படி பரிந்துரைத்துள்ளனர். வலி குறைய சில மருந்துகளை மருத்துவர் கொடுத்துள்ளார்கள். எல்லாம் சரியாக சில வாரங்கள் ஆகும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சோகத்தில் ரசிகர்கள்
தற்போது நான் என் வீட்டில் ஓய்வெடுக்கிறேன். அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கு மொபைல் இருக்கிறது. ஓய்வில் இருப்பதால் இன்று மாலை என்னால் யாரையும் சந்திக்க முடியாது, அதனால் யாரும் வீட்டுக்கு வரவேண்டாம். வர விரும்புபவர்களுக்கு உங்களால் முடிந்தவரை தெரிவிக்கவும் என பதிவிட்டுள்ளார். அமிதாப் பச்சன் காயமடைந்த தகவலை கேள்விபட்டு ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.


Click it and Unblock the Notifications











