Dharmendra Death: மறைந்தார் பாலிவுட்டின் முடி சூடா மன்னன் தர்மேந்தரா.. சோகக் கடலில் பாலிவுட்
மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் தர்மேந்திரா உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வால் இன்று அதாவது நவம்பர் 24ஆம் தேதி மறைந்தார். அவருக்கு வயது 89. இவரது மறைவு ரசிகர்கள் தொடங்கி, குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாலிவுட் பிரபலங்கள் தர்மேந்திராவின் இல்லத்திற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா, "ஹீ-மேன்" என்று அன்புடன் அழைக்கப்பட்டவர், 89-வது வயதில் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் ஆழ்ந்த அதிர்ச்சி மற்றும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பங்கஜ் தீர், சதீஷ் ஷா, அஸ்ரானி ஆகியோரின் மறைவு என மொத்த பாலிவுட்டும் அடுத்தடுத்து சோகத்தில் மூழ்கி வருகிறது.
அடுத்த வாரத்தில் தர்மேந்திரா தனது 90வது பிறந்தநாளை, அதாவது டிசம்பர் 8ஆம் தேதி கொண்டாட இருந்த நிலையில் அவரது மரணம் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். கடந்த வாரத்தில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர், வீடு திரும்பிய அவருக்கு வீட்டில் வைத்தே, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்தான் இன்று மறைந்துள்ளார்.
நாடு முழுவதும் திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் தர்மேந்திராவுக்கு கண்ணீரால் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது முதல் மனைவி பிரகாஷ் கவுர், மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல், மூத்த மகள் விஜேதா தியோல், இளைய மகள் அஜீதா தியோல், இரண்டாவது மனைவி ஹேமா மாலினி மற்றும் மகள்கள் ஈஷா தியோல், அஹானா தியோல் ஆகியோர் துக்கத்தில் மூழ்கியுள்ளனர்.
கடைசி படம்: தர்மேந்திரா கடைசியாக கடந்த ஆண்டு அதாவது, 2024-இல் வெளியான ஷாஹித் கபூர், க்ரித்தி சனோன் நடிப்பில் வந்த "தேரி பாட்டோன் மேன் ஐசா உல்ஜா ஜியா" படத்தில் நடித்திருந்தார். இவர் கடைசியாக நடித்த படம் என்றால், அது ' இக்கிஸ்'. இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் அகஸ்தியா நந்தா கதாநாயகனாக நடிக்கும் இக்கிஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தர்மேந்திரா நடித்துள்ளார். இந்தப் படம் ஒரு போர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. 1971 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது நடந்த பாசன்டர் போரை மையமாகக் கொண்டு, இரண்டாம் லெப்டினன்ட் அருண் கேட்ர்பாலின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பயோபிக் படமாகும். "இக்கிஸ்" படம் வரும் கிருஸ்துமஸ்க்கு அதாவது டிசம்பர் 25 அன்று ரிலீஸ் ஆகவுள்ளது என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











