பிரபல ஹீரோ படத்தில்.. விஜய் சேதுபதி விலகியதால் வருகிறார் பாலிவுட் வில்லன்.. வனப்பகுதியில் ஷூட்டிங்!
சென்னை: விஜய் சேதுபதி விலகிய படத்தில் பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருக்கிறார்.
தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன், 'அலா வைகுந்தபுரம்லோ' பட ஹிட்டுக்கு பிறகு நடிக்கும் படம், புஷ்பா.
சுகுமார் இயக்குகிறார். அல்லு அர்ஜுனும் சுகுமாரும் ஏற்கனவே ஆர்யா, ஆர்யா 2 படங்களில் இணைந்திருந்தனர்.

சித்தூர் பொண்ணு
அந்தப் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இதில் இணைகின்றனர். ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இதில், அவர் சித்தூர் பகுதியை சேர்ந்தவராக நடிக்கிறார். அதனால், அந்த பகுதி, பேச்சு வழக்கை பேசி பயிற்சி எடுத்து வருகிறார். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

செம்மரக் கடத்தல்
பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்ட இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, வன அதிகாரியாக வில்லன் கேரக்டரில் நடிக்கிறார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும் கூறப்பட்டது.

கொரோனா பரவல்
அதற்குள் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகி விட்டதாகக் கூறப்பட்டது. கால்ஷீட் பிரச்னை ஏற்படும் என்று அவர் விலகிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து கன்னட ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது.

பாலிவுட் வில்லன்
தமிழ் நடிகர் பாபி சிம்ஹாவும் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் எதுவும் உறுதியாகவில்லை. இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருக்கிறார். அவர் யார் என்பதை படக்குழு தெரிவிக்கவில்லை. விரைவில் அதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மரேடுமிலி வனம்
இதற்கிடையே கொரோனாவுக்கு பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. புஷ்பா படத்தின் படப்பிடிப்பும் தொடங்குகிறது. இதன் ஷூட்டிங், 10 ஆம் தேதி, ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மரேடுமிலி (Maredumilli) வனப்பகுதியில் நடக்க இருக்கிறது. இதற்கான அனுமதியை படக்குழு பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











