உதயம் தியேட்டரில் குண்டு மிரட்டல்... அலறிடித்து ஓடிய ரசிகர்கள்!

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று பகல் 12 மணி அளவில் பேசிய மர்ம நபர் ஒருவர், "சென்னை கே.கே.நகர் உதயம் சினிமா தியேட்டரில் குண்டு வைக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் குண்டு வெடித்து, தியேட்டர் சிதறப் போகிறது. இதை அந்த தியேட்டரின் காவலாளி தடியனிடம் சொல்லுங்கள்'' என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.
இது பற்றி உடனடியாக கே.கே.நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், மோப்பநாய், மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்று உதயம் தியேட்டரில் சோதனை போட்டார்கள்.
அப்போதுதான் காலை காட்சி தொடங்க தயாராக இருந்தது. உடனடியாக ரசிகர்கள் வெளியேற்றப்பட்டு, சோதனை நடந்தது. ஆனால் அது வெறும் புரளி என்று தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து சினிமா காட்சி நடந்தது.
மிரட்டல் ஆசாமி, தியேட்டர் காவலாளியை திட்டியதால், அந்த காவலாளிக்கு வேண்டாத நபர் யாரோ, இது போல் போனில் பேசி மிரட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











