ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. டிஜிபி ஆபீஸூக்கு வந்த மெயில்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷின் வீட்டை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களாக அரசியல் பிரமுகர்கள், பிரபல தொழிலதிபர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்களின் வீடுகளுக்கு மிரட்டல் அழைப்புகள் வந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்போது ரஜினி, தனுஷ் வீடு குறிவைக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில், போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷின் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார், உடனடியாக அங்கு விரைந்து சென்று, முழு பகுதியையும் சுற்றிவளைத்து பாதுகாப்பு வலையை ஏற்படுத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு உதவியுடன் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் தீவிர சோதனையின் நடத்தினர்.

வெடிகுண்டு புரளி: இந்த சோதனையில் எவ்வித வெடிகுண்டும் அல்லது சந்தேகப்படும் பொருட்கள் இல்லாததால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது. ஆனால், அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அழைப்பு வந்த மெயில் ஐடியை கண்டறிய சைபர் பிரிவு அதிகாரிகள் தொழில்நுட்ப ரீதியாக பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் அதேபோல, நடிகர் அஜித் குமார், ரம்யாகிருஷ்ணன், த்ரிஷா, விஜய், சூர்யா, எஸ்.வி.சேகர், சத்தியமூர்த்தி பவன், ஈவிபி பிலிம் சிட்டி ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அவர்களின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தேதி நெருங்கி வரும் இந்த நேரத்தில் வெடி குண்டு மிரட்டல் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











