அப்பா போயிட்டாரு.. இனிமே எங்களுக்கு யாரு இருக்கா.. கதறி அழுத போண்டா மணியின் மகன்.. அய்யோ பதறுது!
சென்னை: நகைச்சுவை நடிகர் போண்டா மணி நேற்று இரவு வீட்டு வாசலில் விழுந்த நிலையில், அவரது உயிர் பிரிந்து விட்டது. மயங்கிக் கிடந்த நிலையில் இருந்த அவரை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக குடும்பத்தினர் கொண்டு சென்ற நிலையில், உங்க அப்பா இறந்துட்டாருப்பா என போண்டா மணியின் மகனிடம் மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் மனமுடைந்து போயுள்ளார் போண்டா மணியின் மகன் மற்றும் அவரது குடும்பத்தினர்.
1963ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டத்தில் பிறந்தவர் போண்டா மணி. கேத்தீஸ்வரனாக இருந்த தனது பெயரை சினிமாவில் காமெடி நடிகராக நடிக்க கவுண்டமணி ஸ்டைலில் போண்டா மணி என மாற்றிக் கொண்டார். பாக்கியாராஜ் இயக்கி நடித்த பவுனு பவுனுதான் படத்தில் நடித்து 1991ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார்.

சினிமாவிலும் சின்னத்திரையிலும்: சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள போண்டா மணி சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்த கங்கா யமுனா சரஸ்வதி தொடரில் நடித்து பிரபலமானார் போண்டா மணி. பூவே பூச்சூடவா, எங்க வீட்டு மீனாட்சி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.
வறுமையிலும் நோயிலும்: பல படங்களில் நடித்தாலும் வசதியான வாழ்க்கையை போண்டா மணி வாழவில்லை. தொடர்ந்து நோய் பாதிப்பிலும் சிக்கி வந்த அவர் தனது சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு சென்று வந்தார். ஒரு கட்டத்தில் இரு கிட்னியும் ஃபெயிலியர் என தெரிந்த நிலையில், ரொம்பவே கஷ்டப்பட்ட அவருக்கு அரசு மற்றும் நடிகர்கள் என பலர் உதவிய நிலையிலும், நோய் பாதிப்புக் காரணமாக நேற்று இரவு உயிரிழந்து விட்டார்.
கதறி அழும் மகன்: சென்னையில் உள்ள போண்டா மணியின் வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், அவருக்கு அருகே மனைவி மாதவியும் மகள் சாய் குமாரியும் அழுது கொண்டு நிற்கின்றனர். கூடவே போண்டா மணியின் மகன் சாயும் கண்ணீர் வடிக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி மனதை உலுக்குகின்றன. குடும்பத்திற்காக தனது தந்தை தான் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஓடாக உழைத்து வந்தார். இப்போ எங்களுக்குன்னு யாருமே இல்லை. அரசாங்கமோ அல்லது நடிகர் சங்கமோ தான் உதவி செய்ய வேண்டும் என போண்டா மணியின் மகன் சாய் அழுதபடியே கோரிக்கை வைத்துள்ளார்.
பல்லக்கில் வாழவில்லை: சினிமா நடிகர்கள் அனைவரும் பல்லக்கில் வாழவில்லை. போண்டா மணி போல என்னை போலத்தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சில ஸ்டார்கள் மட்டுமே சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். கையில் இருக்கும் காசை எல்லாம் கொடுத்து உதவும் மனம் கொண்டவர் போண்டா மணி அவரது மறைவு மனசை ரொம்பவே கஷ்டப்படுத்துகிறது என நகைச்சுவை நடிகர் முத்து காளை போண்டா மணிக்கு மரியாதை செலுத்திய பின்னர் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











