“ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் அமுக்கிக் கொல்லப்பட்டாரா?”.. டிஜிபிக்கு பதிலடி தந்த போனிகபூர்!
ஸ்ரீதேவி கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது கற்பனைக் கதை என அவரது கணவர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஸ்ரீதேவியின் மரணம் கொலை என கேரள டிஜிபி கூறியிருப்பது பற்றி ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. முன்னணி நடிகையாக இருந்தபோதே, தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவரது மூத்த மகள் ஜான்வி கபூரும் நடிகையாக உள்ளார்.
கடந்த வருடம் தனது உறவினர் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்றிருந்தபோது, தங்கியிருந்த ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் தவறி விழுந்து ஸ்ரீதேவி மரணமடைந்தார். ஸ்ரீதேவியின் இந்த மரணம் திரையுலகினரையும், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

அறிக்கை:
அவர் மது போதையில் குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் பலருக்கு ஏற்பட்டது. துபாய் தடயவியல் அதிகாரிகளின் சோதனையின் அடிப்படையில், ஸ்ரீதேவியின் மரணம் விபத்து தான் என அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து ஸ்ரீதேவி மரணம் தொடர்பான சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

கேரள டிஜிபி பேட்டி:
இந்நிலையில் சமீபத்தில் கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் அளித்திருந்த பேட்டியொன்றில், ‘ஸ்ரீதேவியின் மரணம் கொலை தான் என தன் நண்பரும், தடயவியல் நிபுணருமான உமாதாதன் கூறியதாக' தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அவர், ‘ஒருவர் எவ்வளவு மது அருந்தியிருந்தாலும் ஒரு அடி நீரில் மூழ்க வாய்ப்பில்லை. அதே நேரம் இறந்தவரின் காலை வேறு ஒருவர் பிடித்து நீரில் மூழ்கடித்தால் மட்டுமே உயிரிழக்க முடியும் என உமாநாதன் தெரிவித்ததாக' கூறியிருந்தார்.

சர்ச்சை:
டிஜிபி கூறிய தடயவியல் நிபுணர் உமாதாதன் தற்போது உயிருடன் இல்லை. சமீபத்தில் தான் அவர் உயிரிழந்தார். டிஜிபியின் இந்தப் பேட்டியால் மீண்டும் ஸ்ரீதேவி மரணம் பற்றிய சந்தேகம் உயிர் பெற்றுள்ளது. இது தொடர்பான பல்வேறு விவாதங்களும் சமூகவலைதளங்களில் நடைபெற்றன.

போனிகபூர் விளக்கம்:
இந்தச் சூழ்நிலையில், ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அவரது கணவர் போனிகபூர் ஸ்பாட்பாய் இ என்ற ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், "இது மாதிரியான முட்டாள் தனமான கதைகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. இது போன்ற கதைகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கும். அதனால் இதற்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்தக் கதை ஒருவரின் கற்பனை மட்டுமே" எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











