இதை பார்க்க ஸ்ரீதேவி உயிருடன் இல்லையே: போனி கபூர் வருத்தம்
சென்னை: நேர்கொண்ட பார்வை படம் வெற்றிநடை போடும் நேரத்தில் ஸ்ரீதேவி உயிருடன் இல்லையே என்று வருத்தப்பட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்த நேர்கொண்ட பார்வை படம் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. அஜித் ரசிகர்கள் அல்லாதவர்களும் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளனர்.

நோ என்றால் நோ என்று அஜித் சொன்னால் மக்களிடம் சென்றடையும் என்று தயாரிப்பாளர் போனி கபூரும், ஸ்ரீதேவியும் நம்பியது வீண் போகவில்லை.
அஜித்தை வைத்து தன் கணவர் போனி கபூர் தமிழ் படத்தை தயாரிக்க வேண்டும் என்று நடிகை ஸ்ரீதேவி ஆசைப்பட்டார். ஆனால் பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என்று ஐடியா கொடுத்தது அஜித் தான். அஜித் போன்ற ஒரு பெரிய நடிகர் பிங்க் ரீமேக்கில் நடித்தால் அது நிச்சயம் பலதரப்பட்ட மக்களை சென்றடையும் என்று நம்பினார் ஸ்ரீதேவி. அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை.
நேர்கொண்ட பார்வை படம் வர வேண்டும் என்று விரும்பினார் ஸ்ரீதேவி என்கிறார் போனி கபூர். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

நான் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்த காலம் ஸ்ரீதேவியுடன் இருந்தது தான். அவர் இல்லாமல் வாழ்வது தான் சவாலாக உள்ளது. என் தமிழ் திரையுலக பயணத்தை பார்க்க ஸ்ரீதேவி இல்லையே என்று வருத்தமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை இந்தியாவில் மட்டும் அல்ல அமெரிக்காவிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அஜித் மாஸ் காட்டவில்லை, பன்ச் வசனம் பேசவில்லை, சொல்லப் போனால் அவருக்கு அதிக முக்கியத்துவம் கூட இல்லை அப்படி இருந்தும் நேர்கொண்ட பார்வை அதுவும் ஒரு ரீமேக் படத்திற்கு இந்த அளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
அஜித் தனது இமேஜை பற்றி கவலைப்படாமல் நடித்ததற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











