படப்பிடிப்பு தளத்தை சர்வ நாசமாக்கிய டவ் தே புயல்.. கடும் அப்செட்டில் வலிமை பட தயாரிப்பாளர்!
மும்பை: ஏற்கனவே எடுத்து வைத்த படங்களை தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் ரிலீஸ் செய்ய முடியாமல் சினிமா உலகம் தவித்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் மும்பையை சூறையாடிய டவ் தே புயல் பாலிவுட் திரையுலகையும் சும்மா விட்டு வைக்கவில்லை.
வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் அஜய் தேவ்கன் படப்பிடிப்பு தளத்தை சூறையாடி சென்றுள்ளது.

டவ் தே புயல்
கொரோனா பாதிப்பு ஒரு புறம் மக்களை போட்டு வாட்டி எடுத்து வரும் நிலையில், சமீபத்தில் வந்த டவ் தே புயல் மும்பை மற்றும் குஜராத் என வட மாநிலங்களை புரட்டிப் போட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் இந்த புயல் காரணமாக பலியாகி உள்ளனர். பாலிவுட் திரையுலகையும் பல கோடி நஷ்டத்துக்கு ஆளாக்கி சென்றுள்ளது இந்த புயல்.

மைதானமாக மாறிய மைதான்
வலிமை படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜய் தேவ்கன், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்து வரும் மைதான் படத்தின் பிரம்மாண்ட கால் பந்தாட்ட செட் மும்பை புறநகரில் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஈவு இரக்கமின்றி அந்த செட்டை மொத்தமாக சூறையாடி சென்றுள்ளது டவ் தே புயல்.

15 நாள் தான் பாக்கி
மும்பையில் லாக்டவுன் தளர்த்தப்பட்டால், அடுத்த 15 முதல் 17 நாட்களுக்குள் அந்த பிரம்மாண்ட செட்டில் கடைசி கட்ட படப்பிடிப்பை முடித்து விடலாம் என திட்டம் போட்டு வைத்திருந்த தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குநர் அமித் சர்மாவுக்கு இந்த பாதிப்பு பேரிடியாக விழுந்துள்ளது.

பல கோடி நஷ்டம்
ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக ஒட்டுமொத்த திரையுலகமும் புதிய படங்களை வெளியிட முடியாமல் திண்டாடி வருகின்றன. ஒடிடியில் ரிலீஸ் செய்வதா? தியேட்டர் திறக்கும் வரை காத்திருப்பதா? என யோசனை செய்தே ஏகப்பட்ட கோடிகள் நஷ்டமாகி வருகின்றன. இந்நிலையில், டவ் தே புயலும் தன் பங்குக்கு பாலிவுட் திரையுலகை துவம்சம் செய்துவிட்டு சென்றுள்ளது.

சல்மான் கான் படப்பிடிப்பு தளமும்
அஜய் தேவ்கனின் மைதான் படத்தின் செட் மட்டுமின்றி பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் டைகர் 3, ஜுனைத் கானின் மஹாராஜா மற்றும் பிரபல டிவி தொடரான ஹே ரிஷ்டா கியா கெஹ்லதா ஹை உள்ளிட்ட படப்பிடிப்புகளின் செட்களும் சேதம் அடைந்துள்ளன.


Click it and Unblock the Notifications











