Coolie Ticket Booking - கூலி டிக்கெட் முன்பதிவு.. Book My Show சர்வர் க்ராஷ்.. ரஜினிகாந்த்துக்கு மாஸ் குறையல
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கூலி திரைப்படம் இன்னும் ஐந்து நாட்களில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. கேரளாவில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு விற்றது. தமிழ்நாட்டிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சூழலில்; சிறிது நேரத்திலேயே புக் மை ஷோ சர்வர் க்ராஷ் ஆகியிருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கூலி படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா என பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கண்டிப்பாக சம்பவம் உண்டு என்ற நம்பிக்கையை அவரது ரசிகர்கள் கொண்டிருக்கிறார்கள்.
எப்படி இருக்கும் கூலி?: இந்தத் திரைப்படம் எப்படி இருக்கும் என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. ஒரு சிலர் படம் பார்த்துவிட்டார்கள். அவர்கள் படத்தை ஏகத்துக்கும் கொண்டாடுகிறார்கள். அதேபோல் லோகேஷும் தன்னுடைய பேட்டிகளில் பெரிய ஹைப் எதுவும் ஏற்றவில்லை. அதேசமயம் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்பதுதான் அவரது கருத்தாக இருக்கிறது.

இடைவேளை சூப்பர்: சமீபத்தில்கூட செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கூலி படத்தின் இடைவேளை காட்சி திருப்புமுனையாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும். இதுவரை யாரும் செய்யாத முயற்சியை இதில் செய்திருக்கிறேன்' என கூறி சர்ப்ரைஸையும், சஸ்பென்ஸையும் கொடுத்திருக்கிறார். மேலும் இது டைம் ட்ராவல் கதை இல்லை என்பதையும் அவர் ஒரு பேட்டியில் உறுதிப்படுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் சாதனை: கேரளாவில் நேற்று டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ரிசர்வேஷன் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே ஒரு கோடி ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இது ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் உச்சக்கட்ட ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கியிருக்கிறது.
சர்வர் கிராஷ்: முன்பதிவு தொடங்கியவுடன் புக் மை ஷோ வலைதளத்துக்கு ரசிகர்கள் படையெடுக்க தொடங்கினார்கள். அதன் காரணமாக சில மணி நேரங்களிலேயே சர்வர் க்ராஷ் ஆனது. இன்னும் சிறிது நேரத்தில் அது சரி செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. இதனையெல்லாம் பார்த்த மற்ற நடிகர்களின் ரசிகர்கள் ரஜினிக்கு மாஸ் குறையவே இல்லை என பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











