சூர்யா அப்பாவை எதிர்க்க எனக்கு திராணியில்லை.. விமலுக்கும் எனக்கும் பிரச்சனையா?.. போஸ் வெங்கட் பளிச்!
சென்னை: கன்னி மாடம் படத்தை தொடர்ந்து இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள சார் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று திரையிடப்பட்டது. அந்த காட்சிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய போஸ் வெங்கட் அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.
மபொசி எனும் டைட்டிலில் தான் இந்த படத்தை போஸ் வெங்கட் இயக்கியிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் சில பிரச்சனை காரணமாக அந்த டைட்டில் சார் என மாறியது. அதற்கான உண்மையான காரணத்தை வெளிப்படையாக போஸ் வெங்கட் கூறியுள்ளார்.

நடிகர் சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமாரை எதிர்த்து அந்த டைட்டிலை தன்னால் வைக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
மெட்டி ஒலி: சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என சென்னைக்கு வந்த வெங்கட் ஆட்டோ ஓட்டிக் கொண்டே சினிமா வாய்ப்புகளை தேடினார். மெட்டி ஒலி சீரியலில் போஸ் எனும் கதாபாத்திரத்தில் வாய்ப்புக் கிடைத்த நிலையில், போஸ் வெங்கட் ஆகவே மாறினார். மெட்டி ஒலி, லக்ஷ்மி, அரசி, மகாபாரதம் என பல சீரியல்களில் நடித்த அவருக்கு சினிமாவில் வில்லனாகவும் துணை நடிகராகவும் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன.
சூப்பர் ஸ்டார் படத்தில்: ஈர நிலம் படத்தில் அறிமுகமான போஸ் வெங்கட் அரசாட்சி, தலைநகரம், தீபாவளி, மருதமலை, தாம் தூம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் ஆதிகேசவன் பிஏவாக நடித்து மாஸ் காட்டியிருப்பார். சரோஜா, சிங்கம், கோ, 36 வயதினிலே, டாணாக்காரன், சாமானியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
விமலுக்கும் எனக்கும் பிரச்சனையா?: சார் படத்தின் புரமோஷன்கள் மற்றும் பத்திரிகையாளருக்கான காட்சி என படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் விமல் எதிலுமே கலந்துக் கொள்ளவில்லையே ஏன்? என்கிற கேள்வியை பத்திரிகையாளர் எழுப்ப விமல் என் மாப்ள, நாங்க உண்மையிலேயே சொந்தக்காரங்க. எனக்கும் அவருக்கும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. இதே நேரத்தில் அவர் இன்னொரு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். அதுவும் நம் நண்பர்கள் படம் தான். அதனால் தான் புரமோஷனுக்கு அவரால் வரமுடியவில்லை என்றார்.
சிவகுமாரை எதிர்த்து: மபொசி தலைப்பை சார் என மாற்றக் காரணமே சிவகுமார் அப்பா கேட்டுக் கொண்டதால் தான். மபொசி குறித்து டாக்குமெண்டரி படம் ஒன்றை அவர் உருவாக்க உள்ளார். சூர்யா மற்றும் அவருடைய அப்பா சிவகுமார் உள்ளிட்டோரை ரொம்ப வருடங்களாகவே தெரியும். அவர் கேட்டதுமே நாம் டைட்டிலை மாற்றிக் கொள்ளலாம் என மாற்றி விட்டேன். அவர்களை எதிர்த்து அதே டைட்டில் வைக்க எனக்கு திராணி கிடையாது என போஸ் வெங்கட் பேசியுள்ளார்.
ஏகப்பட்ட சென்சார்: சார் படத்தின் டிரெய்லரில் சாமியை கொன்னுட்டேன் என்கிற வசனம் இடம்பெற்று இருந்தது சர்ச்சையை கிளப்பியது. படத்தில் பல இடங்களில் வசனத்தை மியூட் செய்தும் சில இடங்களில் காட்சிகளை கட் செய்தும் தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியுள்ளனர். தயாரிப்பாளர் எங்க எப்படி வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்தாருன்னு தெரியல, அந்த தம்பி நஷ்டம் அடையக் கூடாது என அனைத்துக்கும் ஓகே சொல்லி படத்தை ரிலீஸ் செய்ய முடிவு பண்ணிட்டேன் என அதற்கும் விளக்கம் அளித்துள்ளார் போஸ் வெங்கட். இந்த படத்தை வெற்றிமாறன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. விமலுக்கு இந்த படம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











