கெத்து! புதுப்பேட்டை நடிகர்கள்.. ஒரே ஆண்டில் 50வது படத்தை ரிலீஸ் செய்த விஜய் சேதுபதி, தனுஷ்..
சென்னை: நடிகர் தனுஷின் 50வது படமான ராயன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. படத்தினை தானே எழுதி, இயக்கியும் உள்ளார் தனுஷ். இந்த படம் பார்த்த தனுஷ் ரசிகர்கள் படம் தனுஷின் புதுப்பேட்டை மற்றும் வடசென்னை ஆகிய படங்களை விடவும் சிறப்பாக இருப்பதாக கூறினர். ரசிகர்கள் குறிப்பிட்ட இரண்டு படங்களின் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.
இதில் அதிக எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ள படம் என்றால் அது புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம்தான். அந்தப் படத்தில் தனுஷ், கூலிப்படையில் இருந்து எப்படி தாதாவாக மாறுகின்றார் என்பதுதான் கதையாக இருக்கும். படத்தினை எடுத்த இயக்குநர் செல்வராகவன் படத்தில் ரசிகர்களை கட்டிப்போடும் எமோஷன் காட்சிகளை வைத்து படம் மாபெரும் வெற்றியை எட்ட காரணமாகிவிட்டார்.

கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த படம்தான் புதுப்பேட்டை. இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகர் விஜய் சேதுபதி. இந்த படம் வெளியானபோது விஜய் சேதுபதி படத்தில் நடிக்க வாய்ய்பு தேடிக்கொண்டு இருந்த காலகட்டம். தனக்கு கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். புதுப்பேட்டை படம் வெளியாகி கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த தனுஷின் 50வது படம் சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆகியுள்ளது.
50வது படங்கள்: அதேபோல் புதுப்பேட்டை படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த விஜய் சேதுபதி, அதன் பின்னர் தனது திறமையின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்து இப்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிட்டார். இவரது 50வது படமான மகாரஜா படம் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. புதுப்பேட்டைப் படத்தில் கதாநாயகனாக நடித்த தனுஷ் மற்றும் அதே படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த விஜய் சேதுபதி என இருவரும் ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளியில் தங்களது 50வது படத்தினை ரிலீஸ் செய்துள்ளனர். இரண்டு படங்களுமே வெற்றிப் படங்களின் வரிசையில் இணைந்துள்ளது.

ஒரே பாணி: இருவரும் தமிழ் சினிமாவில் நடிப்பில் மிரட்டக்கூடிய நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். சொல்லப்போனால் இருவரது பாணியும் கிட்டத்தட்ட ஒரே பாணிதான். இருவரும் கமர்ஷியல் படங்களிலும் நடித்து ரசிகர்களை திருப்தி படுத்துகின்றனர். அதேபோல் தங்களுக்குள் இருக்கும் நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தும் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றனர். விஜய் சேதுபதி நேரடியாக வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.

இணைந்து பணியாற்றிய படங்கள்: புதுப்பேட்டை படத்திற்குப் பின்னர் இருவரும் இணைந்து இன்னும் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இருவரும் இணைந்து விரைவில் படத்தில் நடிக்கவேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளனர். இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றியுள்ளனர். விஜய் சேதுபதியின் நானும் ரௌடிதான் படத்தை தயாரித்தது தனுஷ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











