போர்க்களமான பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா.. போலீஸார் குவிப்பு!
சென்னை: பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில், ஒருவர் தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக அரங்கத்திற்குள் ஏகப்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு அந்த இடமே கலவர பூமியாக காட்சியளித்தது.
பி.ஆர்.ஓ உதவியாளரை பவுன்சர் ஒருவர் தாக்கியது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியதாக கூறுகின்றனர்.

ஐஸ்வர்யா ராய் வந்ததும்
நடிகை ஐஸ்வர்யா ராய் நிகழ்ச்சி நடக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்குள் வந்ததுமே கூட்டம் அலை மோதியது. பவுன்சர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல அனைவரையும் தள்ளி விட்டு உள்ளே கொண்டு சென்றனர். அதன் பின்னர் சற்று நேரத்திற்குள் இப்படியொரு சம்பவம் நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பளார் விட்ட பவுன்சர்
பி.ஆர்.ஓ உதவியாளர் விக்கி என்பவரை பவுன்சர் அன்சாரி என்பவர் தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பவுன்சர் ஒருவர் பி.ஆர்.ஓ உதவியாளரை தாக்கியது மட்டுமின்றி சில கேமரா மேன்களையும் முறைத்துள்ளார். இதனால், அங்கே பெரும் ஆர்ப்பாட்டத்தை ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் துவங்கினர்.

விரைந்த போலீஸார்
இந்த பிரச்சனையை அறிந்ததும் அரங்கத்திற்குள் போலீஸார் ஏகப்பட்ட பேர் உள்ளே புகுந்தனர். மேலும், பிரச்சனையை பேசித் தீர்க்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் பல செய்தி சேனல்களில் லைவாகவே வெளியாகி நிகழ்ச்சி திட்டமிட்டப்படி நடக்குமா? நடக்காதா? என்கிற பயத்தையே உருவாக்கியது.

மன்னிப்பு கேள்
மன்னிப்பு கேட்கும் வரை ஒரு அடி நகர மாட்டோம் என பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக திட்டமிட்டப்படி பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பவுன்சர்கள் மற்றும் பிஆர்ஓ இடையேயான பிரச்சனையை பேசி தீர்க்க போலீஸார் முயற்சி செய்தனர்.

சமாதானம்
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவை விட இது பெரிய விஷயமாக மாறிவிட்டதை உணர்ந்த நிலையில், அந்த பவுன்சர் மன்னிப்பு கேட்டதும், அந்த பிரச்சனை சுமூகமாக முடிவடைந்தது. பிரபலங்கள் ஒருவர் ஒருவராக நிகழ்ச்சிக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











