கொலைகார வாரமான டிசம்பர் 8!
Recommended Video

"கொடுமை கொடுமையினு கோவிலுக்கு போனா அங்க ஒரு குரங்கு குத்த வச்சு உட்கார்ந்து இருந்துச்சாம்," என்பது கிராமத்து சொலவடை.
கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தமிழ் நாட்டில் ரீலீசான நான்கு தமிழ் படங்களும் மேற்கண்ட பழமொழியை நினைவுபடுத்தின.

மன அழுத்தங்களையும், கவலைகளையும் திரைப்படங்கள் பார்பதன் மூலம் சில மணி நேரங்கள் அதில் இருந்து விடுபடவே தியேட்டர்களுக்கு மக்கள் வருகின்றனர்.
இந்த வாரம் வெளியான கொடிவீரன் தொடக்கக் காட்சியே தூக்கில் தொங்கும் நிறைமாத கர்ப்பிணிப் பெண், அதனால் அவர் வயிற்றில் வளர்ந்த குழந்தை கீழே விழுவதாக மருத்துவ விஞ்ஞானத்துக்கு புறம்பான காட்சியில் தொடங்கும் படம் முடிகிற வரை ரத்தத்துடன் பயணிக்கிறது. படம் முடிந்து வெளியில் வருகிற போது நம் சட்டையில் ரத்தம் இருப்பது போன்ற பதட்டத்துடன் வரவேண்டியுள்ளது.
நிவின் பாலி, நடித்துள்ள ரிச்சி படத்தில் குழந்தை மாணவன் கத்தியால் இன்னொரு மாணவனை கொலை செய்யும் காட்சியுடன் தொடங்கி படம் முழுக்க பழி வாங்கும் கொலைகள். இதன் விளைவாக கிளைமாக்ஸ் காட்சியில் நாயகன் நிவின் பாலியும் சுட்டுக் கொல்லப்படுகிறார்.
சிபிராஜ் நடித்துள்ள சத்யா பெண்ணை ராடால் தாக்கி துவம்சம் செய்யும் காட்சியுடன் தொடங்கி படம் முழுவதும் பதட்டத்துடன் பார்வையாளனை பயணிக்க வைக்கிறது. ஒரு பெண்ணைச் சுட்டு கொல்லும் கிளைமாக்ஸ்டன் படம் முடிகிறது.
12.12.1950 என ஒரு படம். வெறித்தனமான ரஜினிகாந்த் ரசிகன் பற்றியது. ரசிகர் மன்ற போஸ்டர் ஒட்டும் பஞ்சாயத்தில் கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போகிறவன், கபாலி படம் ரீலீஸ் அன்று முதல் காட்சி பார்க்க பரோலில் வருகிறான். அவனை எதிர் கோஷ்டி கொலை செய்வதுடன் படம் முடிகிறது.
குடும்பங்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருவதில்லை என்ற புலம்பல் திரையுலகில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இப்படி படம் எடுத்தால் எந்த குடும்பம் தியேட்டருக்கு படம் பார்க்க வரும் என்கிறார்கள் திரைப்பட ஆய்வாளர்களும், விமர்சகர்களும்.
கொலையில் தொடங்கி கொலையில் முடியும் நான்கு படங்களும் இந்த வாரம் சினிமா பார்வையாளனுக்கு மட்டும் இல்லை படத்தயாரிப்பாளர்களின் கல்லாவுக்கும் கொலைகார வாரமாக தொடங்கி முடிந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











