Box Office: வித் லவ் படத்துக்கு ஓரளவுக்கு நல்ல ஓபனிங்.. சாய் தன்ஷிகாவின் யோகி டா முதல் நாள் வசூல் மோசம்!
சென்னை: தமிழ் சினிமாவில் பிப்ரவரி முதல் வாரமும் ரொம்பவே டல்லாகவே தொடங்கியுள்ளது. பொங்கல் ரிலீஸ் படங்கள் எல்லாம் வரிசையாக ஓடிடியில் படையெடுத்து வரும் நிலையில், ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று முகம் தெரியாத நடிகர்களின் படங்களை பார்க்கவோ சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களை பார்க்கவோ ஆர்வம் காட்டவில்லை.
வெள்ளிக்கிழமையான நேற்று பிப்ரவரி 6ம் தேதி சிலம்பரசனின் சிலம்பாட்டம் படம் ரீ ரிலீஸ் ஆனது. மேலும், அபிஷன் ஜீவிந்த் நடித்த 'வித் லவ்', சாய் தன்ஷிகாவின் 'யோகி டா' மற்றும் ரெட் லேபிள் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

இதில், ஓரளவுக்கு ஒரு சில மல்டி பிளக்ஸ் தியேட்டர்களையும் பெரிய தியேட்டர்களையும் காப்பாற்றிய படமாக 'வித் லவ்' மாறியுள்ளது.
வித் லவ் முதல் நாள் வசூல்: செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் நல்ல புரமோஷன் உடன் முன்பே செலிபிரிட்டி ஷோவெல்லாம் போட்டு ரசிகர்களை படத்துக்கு வரவழைக்க செய்த வேலைகள் எல்லாம் நல்லாவே வொர்க்கவுட் ஆனது. ஏகப்பட்ட தியேட்டர்கள் கிடைத்தும் ஹவுஸ்ஃபுல் ஷோக்களாக படம் ஓடவில்லை என்றாலும் மற்ற படங்களை விட இந்த படத்தை இந்த வாரம் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வித் லவ் திரைப்படம் இந்தியாவில் 1.5 கோடி ரூபாய் வசூலையும் உலகளவில் 1.75 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டியுள்ளது.
சனி, ஞாயிறு பிக்கப் ஆகிடும்: டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாகியுள்ள வித் லவ் திரைப்படம் சனிக்கிழமையான இன்றும் பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஆரஞ்சு நிறத்தில் டிக்கெட் புக்கிங் காணப்படுகிறது. கண்டிப்பாக சனி மற்றும் ஞாயிறு தலா 2 கோடிக்கு மேல் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டூரிஸ்ட் ஃபேமிலி அளவுக்கு வசூல் வேட்டை நடத்துமா என்பது டவுட்டு தான்.

யோகி டா முதல் நாள் வசூல்: விஷாலின் வருங்கால மனைவியும் நடிகையுமான சாய் தன்ஷிகா நடிப்பில் நேற்று வெளியான யோகி டா படம் முதல் நாளில் வெறும் 17 லட்சம் ரூபாய் மட்டுமே ஈட்டியிருப்பதாக சாக்னிக் தகவல் வெளியிட்டுள்ளது. சாய் தன்ஷிகாவுக்கு பல படங்கள் ஃபிளாப் ஆகி வந்த நிலையில், இந்த முறையாவது கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் இன்னமும் பெரிய ஆதரவை கொடுக்கவில்லை.
ரெட் லேபிள் வசூல்: சாய் தன்ஷிகாவின் யோகி டா படத்தை விட ரொம்பவே சுமராக லெனின் தயாரித்து நடித்து நேற்று வெளியான ரெட் லேபிள் திரைப்படம் வெறும் 3 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. சிம்புவின் சிலம்பாட்டம் படமும் ரீ ரிலீஸில் பெரிதாக வசூல் வேட்டை நடத்தவில்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாரமும் தமிழ் சினிமாவுக்கு பாக்ஸ் ஆபீஸில் பலத்த அடிதான்.
ஓடிடி ரிலீஸ் தான் காரணம்: பிரபாஸின் தி ராஜாசாப் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேற்று வெளியானது. இன்று பிப்ரவரி 7ம் தேதி சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் ஜீ 5 தமிழில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது. பொங்கலுக்கு தியேட்டரில் படத்தை பார்க்காத ரசிகர்கள் கண்டிப்பாக வீட்டில் ஓடிடியில் இந்த படங்களை பார்ப்பார்கள். வரும் 12ம் தேதி சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த மன வரபிரசாத் காரு திரைப்படமும் ஓடிடியில் வெளியாக காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











