அடேங்கப்பா.. 300 கோடி வசூல் சாதனை படைத்த பிரம்மாஸ்திரம்.. கொண்டாட்டத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட்!
மும்பை: பிரம்மாஸ்திரம் திரைப்படத்தின் வசூல் டல் அடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், மீண்டுமொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு தயாரிப்பாளர் கரண் ஜோஹர் பிரம்மாஸ்திரம் பட ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார்.
இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், ஷாருக்கான், நாகார்ஜுனா மற்றும் மெளனி ராய் நடிப்பில் கடந்த வாரம் பிரம்மாண்டமாக வெளியான படம் பிரம்மாஸ்திரம்.
இந்தியா மற்றும் ஓவர்சீஸ் என படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அஸ்திரா வெர்ஸ்
ஹாலிவுட்டில் வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்களை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த நம்ம ஊர் ரசிகர்களுக்காக பாலிவுட்டில் அஸ்திரா வெர்ஸ் கான்செப்ட்டில் வெளியாகி உள்ள படம் தான் பிரம்மாஸ்திரம். இயக்குநர் அயன் முகர்ஜி 5 ஆண்டுகளாக இயக்கிய இந்த படம் கடந்த வாரம் வெளியாகி உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

410 கோடி பட்ஜெட்
பிரம்மாஸ்திரம் திரைப்படம் இந்தியாவிலேயே இதுவரை எந்த படமும் செலவழிக்காத அளவுக்கு 410 கோடி பட்ஜெட்டில் அதிக பொருட்செலவில் உருவான படம் எனக் கூறப்படுகிறது. விஷுவல் எஃபெக்ட்ஸ் எல்லாம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என இத்தனை கோடிகளை கொட்டி இந்த படத்தை எடுத்துள்ளனர்.

300 கோடி பாக்ஸ் ஆபிஸ்
ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், ஷாருக்கான், நாகார்ஜுனா, மெளனி ராய் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பிரம்மாஸ்திரம் திரைப்படம் 300 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையை உலகளவில் படைத்துள்ளதாகவும், இந்தியாவில் மட்டும் 190 கோடி ரூபாய் வரை படம் வசூல் ஈட்டியிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் கரண் ஜோஹர் வெளியிட்டுள்ளார்.

படக்குழு கொண்டாட்டம்
இந்த வார முடிவுக்குள் பிரம்மாஸ்திரம் திரைப்படம் 400 கோடி வசூல் சாதனை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டில் வெளியான படங்கள் தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில், பிரம்மாஸ்திரம் படம் இத்தனை கோடி வசூல் செய்திருப்பது பெரும் புரட்சியாகவே பார்க்கப்படுகிறது. அமீர்கானின் லால் சிங் சத்தா, விஜய் தேவரகொண்டாவின் லைகர் உள்ளிட்ட பெரிய படங்கள் சமீபத்தில் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

ஃபேக் பாக்ஸ் ஆபிஸ் சர்ச்சை
தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஒரு புறம் பிரம்மாஸ்திரம் படம் இத்தனை கோடி வசூல் சாதனை செய்துள்ளது என அறிவித்து வரும் நிலையில், பாய்காட் பாலிவுட் கேங் படம் பார்க்க தியேட்டர்களில் ஆளே இல்லை என்று ஸ்க்ரீன் ஷாட்களை ஷேர் செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், பொய்யான பாக்ஸ் ஆபிஸ் சாதனை ரிப்போர்ட்டை சொல்லி தயாரிப்பாளர் கரண் ஜோஹர் மக்களை ஏமாற்றுகிறார் என்றும் குற்றம்சாட்டி வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான தாகத் படம் 80 கோடியில் எடுக்கப்பட்டு 3 கோடி கூட வசூல் செய்யாமல் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











