Bramayugam - போடு வெடிய.. தமிழிலும் வெளியாகும் பிரமயுகம்.. ரசிகர்கள் உற்சாகம்
சென்னை: மம்மூட்டி நடிப்பில் சமீபத்தில் பிரமயுகம் திரைப்படம் வெளியானது. ராகுல் சதாசிவன் இயக்கிய அந்தப் படத்தில் மம்மூட்டியுடன் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான பிரமயுகம் பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது. முக்கியமாக மம்மூட்டியின் நடிப்பு ரசிகர்களை மிரள வைத்தது. இந்த வயதிலும் இப்படியான கதையை தேர்ந்தெடுத்து நடிக்கிறாரே என்ற பாராட்டையும் ரசிகர்கள் அவருக்கு கொடுத்திருக்கிறார்கள்.
முகம்மது குட்டி பனம்பரிம்பில் இஸ்மாயில் என்ற இயற்பெயரை கொண்டவர் மம்மூட்டி. கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி பிறந்தார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மம்மூட்டி அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அவருக்கு கலை மீது தீராத ஆர்வம் இருந்தது. இதன் காரணமாக சினிமாவில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என ஆர்வத்தோடு இருந்தார்.

சினிமாவில் என்ட்ரி: அதன்படி 1971ஆம் ஆண்டு வெளியான அனுபவங்கள் பாளிசிக்கல் என்ற படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் டீசண்ட்டான வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து சில படங்களில் நடித்துவந்த அவருக்கு 1976ஆம் ஆண்டு எம்.டி.வாசுதேவன் நாயரின் அறிமுகம் கிடைக்க அவரது வாசுதேவனின் இயக்கத்தில் தேவலோகம் படத்தில் நடித்தார். 1979ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மம்மூட்டிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டாக முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார்.
எதார்த்தமான ஹீரோ: மம்மூட்டியை பொறுத்தவரை தனது நடிப்பில் எந்த விதமான அலட்டலையும் காட்டிக்கொள்ளாதவர். தனது முக பாவனையிலேயே அனைத்தையும் சொல்லி அனைவரையும் கவர்ந்துவிடுவார். அதனால்தான் இந்தியாவிலேயே மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை அவர் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலையாள திரையுலகில் மம்மூட்டிதான் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த ஹீரோ என்பதும் நினைவுகூரதக்கத்து.
தமிழில் மம்மூட்டி: மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் தமிழிலும் நடித்திருக்கிறார். 1990ஆம் ஆண்டு வெளியான மௌனம் சம்மதம் மற்றும் 1991ஆம் ஆண்டு வெளியான அழகன் படத்தில் நடித்த மம்மூட்டிக்கு தமிழில் மெகா ஹிட் படமாக அமைந்தது ரஜினியுடன் இணைந்து நடித்த தளபதி. அந்தப் படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த மம்மூட்டி நட்புக்கு இலக்கணமாக இருக்கும் ஒருவர் எப்படி இருப்பாரோ அப்படியும்; ஒரு பெரிய டான் எவ்வளவு பக்குவமாக இருப்பாரோ அப்படியும் நடித்து அதகளப்படுத்தியிருந்தார். அதேபோல் தமிழில் அவர் நடித்த மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட பல படங்கள் ஹிட்டடித்திருக்கின்றனர்.
காதல் தி கோர்: அவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு காதல் தி கோர் திரைப்படம் வெளியானது. ஜோதிகா மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மம்மூட்டி அதில் தன் பாலின ஈர்ப்பாளராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பெரிய ஸ்டார் வேல்யூவில் இருக்கும் மம்மூட்டி எதை பற்றியும் யோசிக்காமல் தன் பாலின ஈர்ப்பாளராக நடித்திருந்தது ரசிகர்களிடம் ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்தியது. அந்தப் படத்தை முடித்த பிறகு பிரமயுகம் என்ற படத்தில் நடிக்க கமிட்டானார் மம்மூட்டி.
மெகா ஹிட்: படத்தை ராகுல் சதாசிவன் இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான அந்தப் படம் மெகா ஹிட்டாகியுள்ளது. முக்கியமாக மம்மூட்டியின் நடிப்பு அனைவரையும் மிரள வைத்தது என்பதுதான் உண்மை. 20லிருந்து 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான அந்தப் படம் இதுவரை 40 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் மலையாளத்தில் மட்டும் எப்படி இப்படி தரமான படங்களாக வருகின்றன என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.
மலையாளத்தில் மட்டும்தான் இந்தப் படம் ரிலீஸாகியிருந்தது. இந்நிலையில் படக்குழு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி பிரமயுகம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸாகவிருக்கிறது. இதனால் மற்ற மொழிகளிலும் இந்தப் படம் கண்டிப்பாக கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications