’பீஸ்ட்’ல் வில்லனாக நடிக்கிறாரா செல்வராகவன்? சன் பிக்சர்ஸின் அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் குஷி!
சென்னை: ரசிகர்கள் கேட்காத நேரத்தில் சட்டென சூப்பர் அப்டேட்டை கொடுத்து அசத்துவது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு கை வந்த கலை.
திடீரென தற்போது இயக்குநர் செல்வராகவன் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் இணைந்து விட்டார் என்கிற ஹாட் அப்டேட்டை வெளியிட்டு தளபதி ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கூட்டிச் சென்று விட்டது.
சாணிக் காயிதம் படத்தின் மூலமாக நடிகராக மாறிய செல்வராகவன் விஜய் படத்தில் என்ன ரோலில் நடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

தளபதியின் பீஸ்ட்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. பூஜா ஹெக்டே இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மலையாள நடிகை அபர்ணா தாஸும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கோலமாவு கோகிலா
விஜய் டிவியில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை இயக்கி வந்த இயக்குநர் நெல்சன் சிம்புவின் வேட்டை மன்னன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாக திட்டமிட்டு இருந்தார். ஆனால், அந்த படம் டிராப் ஆன நிலையில், நயன்தாராவின் கோலாமாவு கோகிலா எனும் கல்ட் காமெடி படத்தை இயக்கி சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.

சிவகார்த்திகேயனின் டாக்டர்
கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார் இயக்குநர் நெல்சன். அந்த படம் ஒடிடியா? தியேட்டரா? என குழம்பி வந்த நிலையில் நேரடியாக டிவியில் வெளியாக போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி 65
கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தின் பப்ளிசிட்டி என கலக்கிய இயக்குநர் நெல்சனை அழைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தான் அடுத்து நடிக்க உள்ள தளபதி 65 படத்தை இயக்கும் சூப்பரான வாய்ப்பை இயக்குநர் நெல்சனுக்கு வழங்கினார். கிடைத்த வாய்ப்பை சூப்பராக பயன்படுத்த வேண்டும் என நினைத்து ஜார்ஜியாவிலேயே முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்து சென்னை திரும்பினார் நெல்சன்.

மூன்று வில்லன்கள்
இந்த படத்தில் விஜய்க்கு மூன்று வில்லன்கள் என தகவல்கல் வெளியாகி உள்ளன. மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ விஜய்க்கு வில்லனாக ஏற்கனவே ஒப்பந்தம் ஆகி உள்ள நிலையில், மேலும் இரண்டு வில்லன்கள் யார் என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அதிரடியாக செல்வராகவனை படத்தில் இணைத்து நெல்சன் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

விஜய்க்கு வில்லனா
காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன் தனது தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட இரு படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், விஜய்க்கு வில்லனாக நடிக்க பீஸ்ட் படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளாரா என்கிற கேள்விகளும் எழுந்து வருகின்றன.

கீர்த்தி சுரேஷ் படத்தில்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகவுள்ள இயக்குநர் செல்வராகவன் அடுத்ததாக தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்திலும் நடிகராக இணைந்துள்ள நிலையில், ஜீனியஸ் இயக்குநரின் பீஸ்ட் மோடை பீஸ்ட் படத்தில் காணலாம் என்றும் ரசிகர்கள் வெறித்தனமாக எதிர்பார்க்க இப்போதே தொடங்கி விட்டனர்.

அடுத்தது யாரு
இதுவரை வெளியான விஜய் படங்கள் போல இல்லாமல் முற்றிலும் வேறு மாறியான ஆக்ஷன் அதிரடி படமாக பீஸ்ட் உருவாகி வருவதாக அதன் ஸ்டண்ட் இயக்குநர்கள் உட்பட பலரும் தெரிவித்து வருகின்றனர். மலையாள நடிகர், செல்வராகவன் உள்ளிட்டோர் படத்தில் இணைந்துள்ள நிலையில், மூன்றாவது வில்லன் நிச்சயம் பாலிவுட் நடிகராக இருப்பார் என்றும் ரசிகர்கள் கெஸ் செய்து வருகின்றனர்.

பின்னி எடுப்பார்
இயக்கத்திலேயே நெகட்டிவ் ஷேட் கதாபாத்திரங்கள் பலவற்றை உருவாக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இன்னமும் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் செல்வராகவன் நிச்சயம் நடிகர் விஜய்க்கு எதிராக தரமான நடிப்பை வெளிப்படுத்தி பின்னி எடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











