Breaking: கோலிவுட்டில் அடுத்த பேரிழப்பு... கமலின் ஆஸ்தான காமெடி நடிகர் RS சிவாஜி காலமானார்!!
சென்னை: பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.எஸ் சிவாஜி.
இவர் 1980 முதல் இப்போது வரை பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து பிரபலமானவர்.
கமல்ஹாசனின் ஆஸ்தான காமெடி நடிகர்களில் முக்கியமான ஆர்.எஸ் சிவாஜி, இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 67.
ஆர்.எஸ் சிவாஜியின் மறைவை அறிந்த சினிமா பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காமெடி நடிகர் RS சிவாஜி மறைவு: தமிழில் பிரபலமான காமெடி நடிகர்களில் முக்கியமானவர் RS சிவாஜி. 1981ம் ஆண்டு வெளியான பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான இவர், அதனைத் தொடர்ந்து மதுமலர், வசந்தம் வரும், மீண்டும் ஒரு காதல் கதை படங்களிலும் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. 1986ல் வெளியான விக்ரம் திரைப்படம் மூலம் கமலுடன் முதன்முறையாக இணைந்தார்.
அப்போது முதல் கமல்ஹாசனின் ஆஸ்தான காமெடி கூட்டணியில் RS சிவாஜியும் இடம் பிடித்துவிடுவார். விக்ரம், சத்யா படங்களைத் தொடர்ந்து கமலின் அபூர்வ சகோதரர்களில் போலீஸாக நடித்திருந்தார். ஜனகராஜ்ஜுடன் சேர்ந்து RS சிவாஜி அடித்த காமெடி லூட்டியை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. "சார் நீங்க எங்கய்யோ போய்ட்டீங்க" என ஒரே வசனம் பேசி, ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.
அதேபோல், கமலின் மைக்கேல் மதன காமராஜன் படத்திலும் RS சிவாஜியின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடினர். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஓரளவு பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்த RS சிவாஜி, கோலமாவு கோகிலா, தாராள பிரபு, சூரரைப் போற்று, மாறா, பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக கார்கி படத்தில் சாய் பல்லவியின் அப்பாவாக முக்கியமான கேரக்டரில் நடித்து கவனிக்க வைத்தார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் ரொம்பவே சீனியர் நடிகரான RS சிவாஜி, இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 67. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக காமெடி நடிகராக வலம் வந்த RS சிவாஜியின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. இதனையடுத்து RS சிவாஜி மறைவுக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் RS சிவாஜியின் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











