Breaking: திரையுலகில் அடுத்த சோகம்... பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் ராஜ் மறைவு... பிரபலங்கள் இரங்கல்
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் ராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார், அவருக்கு வயது 68.
தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த ராஜ் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜேஸ்வர ராவ் மகன் கோட்டியுடன் இணைந்து ராஜ்-கோட்டி என்ற பெயரில் இவர்கள் இரட்டை இசையமைப்பாளர்களாக கொடிக் கட்டிப் பறந்தனர்.
அதேபோல், ஏஆர் ரஹ்மானுக்கு தங்களது குழுவில் வாய்ப்பளித்து அவரை கை தூக்கிவிட்டவர் இசையமைப்பாளர் ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு இசையமைப்பாளர் ராஜ் மறைவு:பிரபல இசையமைப்பாளர் T.V.ராஜூ என்பவரின் மகன் ராஜ். இவரும் இன்னொரு இசையமைப்பாளரான ராஜேஸ்வர ராவ் மகன் கோட்டியும் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர். இரட்டை இசையமைப்பாளர்களாகத் தெலுங்குத் திரையுலகில் ஒரு சகாப்தம் படைத்த இவர்களுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த ராஜ் நேற்று இரவு காலமானார். வீட்டில் இருந்த ராஜ் பாத்ரூம் சென்றிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே விழுந்து உயிரிழந்துள்ளார். முன்னதாக அவர் பாத்ரூமில் மயங்கி கிடைந்ததைப் பார்த்த அவரது குடும்பத்தினர், ராஜ்-ஐ மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ராஜ் மறைவுச் செய்திக் கேட்டு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஹலோ பிரதர், கோவிந்தா கோவிந்தா, மூட மேஸ்திரி, கார்த்தவ்யம், கைதி நம்பர். 786 உட்பட பல படங்களுக்கு கோட்டியுடன் இணைந்து இசையமைத்துள்ளார். அதேபோல், தனியாகவும் சில படங்களுக்கு ராஜ் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹலோ பிரதர் படத்திற்கு சிறப்பாக இசையமைத்ததற்காக ஆந்திர அரசின் நந்தி விருதை வென்றார் ராஜ். அதேபோல், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் ஆரம்ப காலத்தில் இசையமைப்பாளர்கள் ராஜ்-கோட்டி இசைக் குழுவில் 8 ஆண்டுகள் கீ-போர்டு பிளேயராக வேலை பார்த்துள்ளார். முக்கியமாக ராஜ் இசையமைத்த 3000 பாடல்களில் 2500க்கும் மேற்பட்ட பாடல்களை SPBயும் சித்ராவும் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் ராஜ் மறைவைக் கேட்டு அதிர்ச்சியான சிரஞ்சீவி, தனது படங்களில் பெரும் பலமாக இருந்தது ராஜ் தான் என அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இந்நிலையில், மாரடைப்பால் உயிரிழந்த இசையமைப்பாளர் ராஜ்-இன் இறுதிச் சடங்கு இன்று ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications











