பிருந்தா மாஸ்டர் பாராட்டிய நடிகர் ஜெய்யை, பங்கமாய் கலாய்த்த விஜய்... ஜெய் மலரும் நினைவுகள்
சென்னை: சமீபத்த்தில் இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த காஃபி வித் காதல் திரைப்படத்தில் நடிகர் ஜெய் நடித்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு சுந்தர்.சி தயாரித்து நடித்திருந்த பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஜெய் வில்லனாக நடித்தது மட்டுமல்லாமல் ஒரு பாடலுக்கு இசையும் அமைத்திருந்தார்.
இந்நிலையில் பகவதி திரப்படத்தில் நடிகர் விஜய் தன்னை கலாய்த்தது பற்றி ஜெய் சுவாரசியமான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

ஜெய் அறிமுகம்
இயக்குநர் வெங்கடேஷ் அவர்கள் இசையமைப்பாளர் தேவாவின் ஸ்டூடியோவிற்கு கம்போஸிங்கிற்காக சென்றபோது, அங்கு தேவாவின் சகோதரர் மகன் ஜெய்யை பார்த்துள்ளார். அந்தச் சமயம்தான் விஜய்யின் பகவதி திரைப்படத்தை இயக்குவதற்கு வெங்கடேஷ் ஒப்பந்தமாகியிருந்தாராம். ஜெய் பார்ப்பதற்கு விஜய் சாயலில் இருந்ததால், உடனே பகவதி திரைப்படத்தில் அவரது தம்பி கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தாராம்.

கலகலப்பான விஜய் குணம்
பொதுவாக நடிகர் விஜய், யாருடனும் அதிகம் பேச மாட்டார் என்பது பலருடைய எண்ணம். ஆனால் தனிப்பட்ட முறையில் அவருடன் பழகினால்தான் தெரியும் அவர் எவ்வளவு கலகலகலப்பானவர் என்று. அதுமட்டுமின்றி ஒரு கதாநாயகன் என்பவன் தொடர்ச்சியாக 4 அல்லது 5 படங்கள் தோல்வி கொடுத்தால் கூட உடனே அதனை சரி செய்து விட வேண்டும் என எனக்கு ஆலோசனை கூறியிருக்கிறார் விஜய் என்று ஜெய் கூறியுள்ளார்.

ஜெய் – விஜய்
பகவதி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து ஒரு வாரம் ஆகிய நிலையில் என்னை மாற்றிவிடலாமா என்று விஜய் எண்ணியிருப்பார் என்று ஜெய் கூறியுள்ளார். காரணம் ஆக்ஷன் என்று இயக்குநர் சொன்னால் உடனே கேமராவை பார்த்துவிடுவாராம் அல்லது என்னது அங்கிள் சொன்னீங்க என இயக்குநரிடமே கேட்பாராம் ஜெய். அப்படித்தான் தட்டுத் தடுமாறி நடித்துள்ளார். ஷூட்டிங் மொத்தமும் முடிந்து இறுதியாக பாடல் ஒன்றை படமாக்கினர்.

கற்பூரம் போன்ற ஜெய்
பிருந்தா மாஸ்டர்தான் கோரியோகிராஃப் செய்தார். ஒரு நடன மூவ்மெண்ட்டில் என்னை கேமரா அருகே கிட்டாரை வைக்கச் சொன்னார். நான் சரியாகச் செய்ததால் சூப்பர் என்று பாராட்ட, அருகில் இருந்த துணை நடன இயக்குநர் 'கற்பூரம்' என பாராட்டினார். உடனே அங்கிருந்த விஜய் அண்ணன், "க்கும்... படமே முடியப் போது..." என்று கலாய்த்துவிட்டார் என்று ஜெய் கூறியுள்ளார். பகவதி படத்தில் சரியாக நடிக்காததால் எப்போது விஜய்யை பார்த்தாலும் நடிக்க ஏதாவது வாய்ப்பு இருந்தால் கூப்பிடுங்கள் என்று விஜய் அண்ணனிடம் கேட்பேன் என ஜெய் பல சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











