ஒளிப்பதிவாளர் செழியன் மறைவு.. பிரபலம் இப்படி கலங்கிட்டாரே.. உருக வைக்கும் பதிவு
சென்னை: ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன் இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். அஞ்சலிக்காக அவரது உடல் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அவரது மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில் பிரபல வசனகர்த்தா பிருந்தா சாரதி; செழியனின் மறைவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தன் முகநூல் பக்கத்தில், "விழியை விட்டு மறையுமா செழியன் உருவம்?
என்ன கொடுமை இது?
விடிந்ததும் இப்படி ஓர் இதயத்தை நொறுக்கும் இடி?
சாகும் வயதா இது?
நீ கற்று வைத்த கல்வி,
பெற்று வந்த விருது,
படைத்திருக்கும் படைப்பு
எல்லாம் கண்ணீரில் மூழ்குவதா?

'சினிமாவின் அர்த்தம் சிம்பிள்' என்பதைக் கோட்பாடாக அல்ல
நடைமுறையில் எடுத்துக் காட்டினாய்.
வானத்தை மடித்துக் தீப்பெட்டிக்குள் திணித்து தருவதைப் போல
உலக சினிமாவை உருக்கி ஒற்றை நூலில்
அறிமுகப்படுத்தினாய்.
புல்லும் பூவும் என்ன ஆடம்பரமாக உருவாகிறது?
அழகியல் என்பது ஆடம்பரத்தில் இல்லை எளிமையில் இருக்கிறது என்பதை
வார்த்தையால் வாழ்க்கையால்
படைப்பால்
அமைதியாய்க் கூறினாய்
உன் அதிராத குரல் கொண்டு.
'கைக்கடக்கமான பட்ஜெட்
உலகத் தரத்துக்கு சினிமா'
என்பதைப்
எளிய பயிற்சிகள் தந்து மாணவப் படைப்பாளிகள் பலரை மலரவைத்தாய்.
இன்று ஏன் உயிரை உலரவைத்தாய்?
எங்களை ஏதேதோ உளர வைத்தாய்?
இசை அறிவாய்
கவிதை அறிவாய்
இலக்கியம், இலக்கணம் எல்லாம் அறிவாய்
என்ன ஆயிற்று உனக்கு?
செய்தியைப் பொய்யாக்கி
எழுந்து வருவாய்.
சிறுகதை எழுதினாய்
திரைக்கதை எழுதினாய்
மகிழ்ந்தோம்
அதற்குள் ஏன் இறுதி அத்தியாயத்தை எழுதினாய்?
மனம் நம்ப மறுக்கிறது
துயரம் தொண்டையை அறுக்கிறது.
'டூ லெட்' என்று நீ சொன்னது இந்த உலகையா?
இயற்கையிலேயே நீ ஒளி படைத்தவன்
அதனால்
நீ ஒளிப்பதிவு செய்த படங்களில் எல்லாம்
இயற்கை ஒளியையே அதிகம் பயன்படுத்தினாய்.
திரைப்படக் கல்லூரியில்
'5C' பாடம் எல்லாம் படித்தாயே
அதோடு கேன்சர் பற்றியும் படித்திருக்க கூடாதா?
புற்று வைத்த மரணமே
சற்று பொறுத்திருக்கக் கூடாதா?
செழியன் கற்று வைத்த அறிவு எல்லாம்
சடுதியில் இப்படி அற்றுப் போவதா?
எங்கள் இதயம் இற்றுப் போவதா?
கண்ணீர் வற்றிப் போவதா?
மரணம் இயற்கையானது எனும்
ஆறுதல் வார்த்தைகள் இன்று பலனளிக்காது.
காலம் இடம் இல்லாத வெளி ஒன்று இருக்கும்
அங்கே செழியன் உயிர்த்திருப்பார்.
அவரைத் தொடர்பு கொள்ள
வழியை மட்டும் நாம் கண்டுபிடித்தாக வேண்டும்.
ஆசானாக அவரை ஏற்ற சினிமா மாணவர்களின்
பயிற்சி தொடரவேண்டும்.
அந்தத் தூய்மையான இதயத்தின் ஓசையை இசைக் குறிப்பாக
எழுத வேண்டும்.
விழியை விட்டு மறையுமா செழியனின் உருவம் ?
ஒளியை விட்டு நகருமா
செழியனின் உயிர்?" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
