கார்த்தியைக் கொதிக்க வைத்த பிரியாணி- பஞ்சாயத்து தீருமா?
பிரியாணி... பெயருக்கேற்ற மாதிரி சுடச் சுட பரிமாறினால்தானே ருசிக்கும்... போகிற போக்கைப் பார்த்தால் இது ஐஸ்பிரியாணி ஆகிவிடும் போலிருக்கிறதே என்ற கமெண்ட்கள் இப்போது கோடம்பாக்கத்தில் கேட்கத் தொடங்கிவிட்டன.

கார்த்திக்கு இணையாக...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த படம் இது. ஆனால் கார்த்தியை வைத்துப் பண்ணுங்க என ஸ்டுடியோ கிரீன் கேட்க, வெங்கட் பிரபுவும் ஒப்புக் கொண்டார். கூடவே கார்த்திக்கு கிட்டத்தட்ட இணையான வேடத்தில் தம்பி பிரேம்ஜியை நடிக்க வைத்தார்.

ரம்ஜானுக்கே வந்திருக்க வேண்டும்
ரம்ஜான் தினத்தில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டனர். ரம்ஜான் - பிரியாணி செம பொருத்தம் என பலரும் பாராட்டிய நேரத்தில் படத்தைப் பார்த்த கார்த்தி செம டென்ஷனாகிவிட்டாராம்.
காரணம், அவருக்கு படத்தின் பல காட்சிகளில் முக்கியத்துவம் இல்லை என்றும், சில காட்சிகள் பிடிக்கவே இல்லை என்றும் கூறப்பட்டது.

தீபாவளிக்கும் இல்லை
இந்த நிலையில் படத்தை இறுதி செய்து, தீபாவளிக்கு கொண்டுவரத் தயாரானார் வெங்கட் பிரபு. ஆனால் காட்சிகளில் எந்த மாற்றத்தையும் அவர் செய்யவே இல்லை. இதனால் இந்தப் படத்தை வெளியிடுவதில் ஆர்வமே காட்டவில்லை கார்த்தி தரப்பு.
அதற்கு பதில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல் இன் ஆல் அழகுராஜாவை வெளியிடுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

பொங்கலுக்காவது...
இருக்கிற நிலைமையைப் பார்த்தால் பொங்கலுக்காவது பிரியாணி வருமா என்ற நிலை. காரணம், கார்த்தி தனது அடுத்த படமான காளியில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

வெங்கட் பிரபு அடம்
தான் சொன்ன மாற்றங்களைச் செய்தால் மட்டுமே பிரியாணியை பொங்கலுக்கு திரையிடலாம் என்பதில் கார்த்தியும் தயாரிப்பாளரும் உறுதியாக உள்ளனர். ஆனால் எந்த மாற்றத்துக்கும் தயாரில்லை என பிடிவாதம் காட்டுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
இப்போ சொல்லுங்க, இது ஐஸ் பிரியாணிதானே!


Click it and Unblock the Notifications











