கணவருக்கும் அண்ணனுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் தங்கை... பாசமிகு படமாக உடன்பிறப்பே வெளியாகிறது!
சென்னை : சமுத்திரக்கனி, சசிகுமார், ஜோதிகா என மூவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் உடன்பிறப்பே.
அண்ணன் தங்கை பாசத்தை கதைக்களமாகக் கொண்டு கிராமத்து பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது.
கத்துக்குட்டி பட இயக்குனர் இரா சரவணன் இப்படத்தை இயக்கி இருக்க கணவருக்கும் அண்ணனுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் தங்கையின் பாசமிகு போராட்டமாக உடன்பிறப்பே வெளியாகிறது.

உடன்பிறப்பே
நடிகை ஜோதிகா தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கி தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். குறிப்பாக சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்திவரும் ஜோதிகா 36 வயதினிலே மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதைத் தொடர்ந்து நடித்த காற்றின் மொழி, ஜாக்பாட்,நாச்சியார், ராட்சசி என அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற இப்பொழுது அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள உடன்பிறப்பே படத்தில் நடித்துள்ளார்.

கிராமத்து மண் வாசனையுடன்
நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக உள்ள சசிகுமார் மற்றும் சமுத்திரகனி இப்படத்தில் ஒன்றாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ளனர். கத்துக்குட்டி பட இயக்குனர் இரா.சரவணன் இப்படத்தை கிராமத்து மண் வாசனையுடன் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் முற்றிலும் படமாக்கப்பட்டுள்ளது.

அண்ணனாக சசிகுமார்
கொரோனா பரவல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டு மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறு வேகத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி இருக்க இதில் தங்கையாக ஜோதிகாவும் அண்ணனாக சசிகுமாரும் நடித்துள்ளனர். ஜோதிகாவுக்கு கணவராக நடிகர் சமுத்திரக்கனி படத்தில் நடித்துள்ளார்.

ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு
கிராமத்தில் எந்த ஒரு அநியாயம் நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்கும் கோபக்கார அண்ணனாக சசிகுமார் இருக்க அவர் செய்யும் செயல்களுக்கு சமுத்திரக்கனி ஒவ்வொரு இடங்களிலும் பதில் கூற இருவருக்கும் இடையே அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக உறவில் விரிசல் ஏற்படுகிறது. இதனால் சசிகுமாருக்கு ஜோதிகாவுக்கும் இடையே பல வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லாமலிருக்க கடைசியாக எவ்வாறு ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இணைகிறார்கள் என்பதே இப்படத்தின் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது.

நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில்
சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருக்க நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. அண்ணன் தங்கை பாசத்தை பற்றிய குடும்பப் படமாக இப்படம் உருவாகி உள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களும் இப்படத்தை காண ஆவலுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











