ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நடக்கும் மைதானம்.. இவ்வளவு வசதியா?.. மலேசியாவில் தளபதி கச்சேரி மாஸ்!
சென்னை: விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அமைந்திருக்கும் புக்கீட் ஜலீல் மைதானத்தில் நாளை பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக பல பிரலங்கள் மலேசியாவில் இறங்கியிருக்கும் சூழலில்; விஜய்யும் சென்னையிலிருந்து கிளம்பி சென்றுவிட்டார். இந்நிலையில் அந்த மைதானத்தின் வசதிகள் குறித்து இதில் பார்க்கலாம்.
விஜய் கடந்த வருடம் நடித்த கோட் திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை. இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கிவிட்டார். அரசியல் பிரவேசம் செய்திருப்பதன் காரணமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ஜனநாயகன் படம்தான் அவருக்கு கடைசி படம். ஏற்கனவே அவர் அதை அறிவித்துவிட்டதால்; பலரும் இப்படத்தில் நடிக்க முயற்சி செய்தார்கள். ஆனால் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோருக்கு மட்டுமே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஜனவரியில் ரிலீஸ்: தெலுங்கில் பாலைய்யா நடித்த பகவந்த் கேசரி படத்துடைய ரீமேக் என்று இந்தப் படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்து தொடர்ந்து சொல்லப்படுகிறது. ஆனால் இன்னொரு படத்தை அப்பட்டமாக காப்பி அடிக்கக்கூடிய இயக்குநர் வினோத் இல்லை என்பதால்; இதில் அவரது ஸ்பெஷல்களும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். படமானது 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இசை வெளியீட்டு விழா: இது ஒருபக்கம் இருக்க இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது. கடைசி ஆடியோ லான்ச் என்பதால் விஜய் என்ன விஷயங்கள் பேசப்போகிறார் என்பதை கேட்பதற்கு அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஆனால் இங்கு அரசியல் மேடைகளில் தொடர்ந்து விஜய் ஏறுவதால்; ஆடியோ லான்ச்சுக்கு தேவையில்லாத சிக்கல்கள் வரலாம் என்று நினைத்து; மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அமைந்திருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் விழாவை நடத்துகிறது படக்குழு.
தளபதி கச்சேரி: நாளை நடக்கவிருக்கும் இந்த இசை வெளியீட்டு விழாவை ஒரு கான்செர்ட் போல் நடத்தவிருக்கிறார்கள். அதில் விஜய்யின் படங்களில் இடம்பெற்ற பாடல்களை சைந்தவி, அனுராதா ஸ்ரீராம், திப்பு என ஏராளமான பின்னணி பாடகர்களும், பாடகிகளும் மேடையில் தோன்றி பாடவிருக்கிறார்கள். நெல்சன் திலீப்குமார், பிரபுதேவா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே மலேசியாவுக்கு போய்விட்டார்கள்.
மைதானத்தின் வசதிகள்: விஜய்யும் சென்னையிலிருந்து கிளம்பி இன்று மலேசியா சென்றிருக்கிறார். இந்நிலையில் மலேசியாவில் முகாமிட்டிருக்கும் விஜய் ரசிகர்களும், ஸ்டேடியத்தில் இருக்கும் வசதிகள் குறித்து சோஷியல் மீடியாக்களில் பதிவிட ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த 1995ஆம் ஆண்டு கட்டப்பட்டு 1998ஆம் ஆண்டு திறக்கப்பட்ட புக்கீட் ஜலீல் மைதானத்தில் மொத்தம் ஒரு லட்சம் பேர் அமரலாம். அதேபோல் 80,000 கார்கள்வரை நிறுத்தும் கார் பார்க்கிங் வசதிகளும் இருக்கின்றனவாம்.
2010ஆம் ஆண்டு மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே நடந்த கால்பந்து போட்டியை காண்பதற்கு 98,543 பேர் வந்திருந்ததுதான் அந்த மைதானத்துக்கு அதிகம் பேர் வந்த சாதனையாக இருக்கிறது. இந்த சாதனையை ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழா முறியடிக்குமா என்பது நாளை தெரிந்துவிடும். இப்போதிருந்தே ஸ்டேடியத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்துவிட்டதாம் மலேசிய அரசாங்கம். முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் அரசியல் தொடர்பாக எதுவும் பேசக்கூடாது என மலேசிய அரசாங்கம் கட்டுப்பாடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











