Vijay: லாரியில் அடிபடுவாய்னு விஜய்யை சொல்லலாமா? சீமானுக்கு எதிராக ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்த போஸ்ட்!
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தினைத் தொடங்கியபோது அவருக்கு வரவேற்புகள் இருந்தது. ஆளும் கட்சியான திமுக அமைச்சர்களே வரவேற்பதாகத்தான் கூறினார்கள். விஜய் கடந்த வாரத்தில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டினை நடத்தினார். அதுவரை விஜய்யை தனது தம்பி என்று அழைத்து வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெகவின் முதல் மாநில மாநாட்டிற்குப் பின்னர் விஜய்யை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார். இது விஜய் ரசிகர்களை மட்டும் இல்லாமல், தவெக தொண்டர்களையும் கோபப்படுத்தியுள்ளது.
குறிப்பாக சீமான் பேசும்போது, லாரியில் அடிப்பட்டுச் செத்துப்போவாய் எனக் கூறியது விஜய் ரசிகர்களை ரொம்பவும் காயப்படுத்தியது மட்டும் இல்லாமல், கோபமூட்டிவிட்டது. இப்படியான நிலையில், விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் சீமானுக்கு எதிராக தங்களது எண்ணங்களையும் கோபங்களையும் வெளிப்படுத்து வருகின்றனர்.

சீமான் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், விஜய் மற்றும் அவரது கட்சியின் கொள்கைகள் குறித்து காட்டமாக விமர்சித்தார். குறிப்பாக, " இது பஞ்ச் டயலாக் இல்லை தம்பி, நெஞ்சு டயலாக். தம்பி நான் குட்டிக்கதை சொல்பவன் இல்லை தம்பி, வரலாற்றினைக் கற்பிக்க வந்தவன். எங்கள் லட்சியத்திற்கு எதிராக தகப்பனே வந்தாலும் எதிரி எதிரிதான். அதில் அண்ணனும் கிடையாது, தம்பியும் கிடையாது" என பேசினார்.
விஜய்: இப்படி அவர் பேசிய பேச்சுகள் மிகவும் காட்டமாக இருந்ததால் விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். இப்படியான நிலையில் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் கோவையைச் சேர்ந்த த.வெ.க., தொண்டர் ஒருவர், சிமானின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியதாக பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

லாரியில் அடிபடுவாய்: அதாவது, "திமுக Vs த.வெ.க. என்பதை மாற்றி நா.த.க Vs த.வெ.க. எனும் மாயையை உருவாக்குகிறார் சீமான். இளைய சமூகத்தின் வாக்குகளை மொத்தமாக எங்கள் தளபதி பறித்து கொள்வார் என இவர் அஞ்சுகிறார். இவரைப்பற்றி எங்கள் தலைவர் தவறாக பேசவில்லை. பிறகு ஏன் மாநாடு முடிந்து ஒரு வாரம் ஆகியும் கதறிக்கொண்டு இருக்கிறார்? லாரியில் அடிபடுவாய், கூமுட்டை போன்ற இழிவான தாக்குதல் எதற்கு? தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்தாலும் ஏற்போம். முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி க்விக் படத்தை தங்கள் வீடுகளில் மாட்டிவணங்குவதுதான் தமிழர் பண்பு. அதுபோலத்தான் பெரியாரும். அவர் எந்த ஜாதி, எந்த மாநிலம் என ஆராய தேவையில்லை. பெரியார்தான் எங்கள் கொள்கை தந்தை.
பல்டி: எம்.ஜி.ஆர், விஜயகாந்த் என யாரையும் மொழி, சாதி, இனம் பார்த்து பிரிக்க மாட்டான் தமிழன். சிலநாட்கள் கழித்து 'என் தம்பியை திட்ட எனக்கு உரிமை இல்லையா?' என பல்டி அடிப்பார். இனி எங்கள் தளபதியே சமரசம் ஆனாலும்.. நாங்கள் ஏற்கமாட்டோம். எக்காலத்திலும் சீமானுடன் கூட்டணி வேண்டாம் என தளபதியிடம் வலியுறுத்துவோம். டிசம்பரில் மண்டல வாரியாக தமிழக சுற்றுப்பயணம் செய்து எங்களை சந்திக்க வரும்போது இதை நிச்சயம் பேசுவோம்" என கோவையைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற தவெக தொண்டர் கூறியதாக ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



Click it and Unblock the Notifications











