மனசாட்சியோட உருட்டுங்க.. விஜய் சேதுபதி படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் கருத்து!
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 250இல் இருந்து 300 படங்கள் வரை ரிலீஸ் ஆகின்றது. ஒரு சினிமாவின் வெற்றியை முன்பெல்லாம் திரையரங்குகளில் ஒரு படம் எவ்வளவு நாட்கள் ஓடுகின்றது என்பதை மைய்யப்படுத்திதான் கணக்கிடப்பட்டது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் வெற்றியை அதன் வசூலைக் கொண்டுதான் நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதற்கு மற்றொரு காராணம் ஓடிடி தளங்கள். ஓடிடி தளங்களைப் பொறுத்தவரையில் ஒரு படத்தினை வாங்கும்போதே அதனை எப்போது ஸ்ட்ரீம் செய்வோம் என்ற தேதியை குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்து கொள்வதாலும் படத்தின் வெற்றியை அதன் திரையரங்க வசூலை மைய்யப்படுத்தியே இருக்கின்றது.
ஒரு ஆண்டுக்கு ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் ஏறக்குறைய 300 படங்கள் வரை ரிலீஸ் ஆவதால், அதில் முன்னணி நடிகர்களின் படங்கள், வளர்ந்துவரும் நடிகர்களின் படங்கள், முன்னணி இயக்குநரின் படங்கள், வளர்ந்து வரும் இயக்குநர்களின் படங்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தினை அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற கனவோடு சினிமா உலகில் காலடி எடுத்துவைக்கும் பலரது படங்களும் வெளியாகின்றது.

இதில் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை உள்ளிட்ட விடுமுறை நாட்களில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி பெரிய வசூல் வேட்டையையே நடத்தி விடுகின்றனர். இதுமட்டும் இல்லாமல், ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சூர்யா உள்ளிட்ட மாஸ் நடிகர்களின் படங்கள் ரிலீஸானாலே அவர்களது ரசிகர்கள் பட ரிலீஸ் நாளை திருவிழா நாளாக மாற்றிவிடுகின்றனர்.
100 கோடி வசூல்: இப்படியான நிலையில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் ஓடிவிட்டது. இந்த 6 மாதங்களில் இதுவரை 100இல் இருந்து 150 படங்கள் வரை ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் இந்த ஆறு மாதங்களில் ரிலீஸ் ஆன படங்களில் அதிகமான வசூலைக் குவித்த படங்களாக அதாவது ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்த படங்களாக இயக்குநர் சுந்தர்.சி-யின் அரண்மனை, சூரியின் கருடன் மற்றும் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா ஆகிய படங்கள் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது. இதில் மகாராஜா படம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது. அதாவது ஜூன் 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
ப்ளூ சட்டை மாறன்: இந்த செய்திகள் தொடர்பாக சினிமா விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதில், அரண்மனை 4, மகாராஜா ஆகிய இரண்டு படங்களுமே ரூபாய் 100 கோடி வசூல் இல்லை. மனசாட்சியோட உருட்டுங்க" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகவும் பரபரப்பான பேச்சினை கிளப்பியுள்ளது.

சர்ச்சை வாக்கெடுப்பு: ப்ளூ சட்டை மாறன் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெறும் மற்ற மொழிப்படங்களையும் விமரசனம் செய்து வருகின்றார். இது மட்டும் இல்லாமல் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பல்வேறு சமூக அரசியல் நிகழ்வுகள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதில் பல்வேறு சர்ச்சைக் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றார். அண்மையில் கூட நடிக்கவே தெரியாத நடிகர்கள் யார் என தனது எக்ஸ் பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தினார். அதில், மகேஷ் பாபு, அஜய் தேவ்கன், பிரபாஸ் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோரது பெயர்களை வைத்து வாக்கெடுப்பு நடத்தினார்.
இதில் அரண்மணை 4 படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டு உள்ளது. அதேபோல் கருடன் படம் இன்று முதல் அதாவது ஜூலை 3ஆம் தேதியில் இருந்து அமேசான் பிரைம், ஆஹா மற்றும் டெண்டுகொட்டாய் ஆகிய ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீம் ஆகின்றது.


Click it and Unblock the Notifications











