ஜூலை மாதத்தில் இந்த வாரமாவது பிளாக்பஸ்டர் படத்தை தமிழ் சினிமா கொடுக்குமா?.. இத்தனை படங்கள் ரிலீஸ்!
சென்னை: இந்த 2025ம் ஆண்டு தொடங்கி 7 மாதங்கள் அடுத்த வாரத்துடன் நிறைவடைய போகிறது. 250க்கும் மேற்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை பிளாக்பஸ்டர் படங்கள் என்றால் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே ரசிகர்களை கவரக்கூடிய படங்களை தமிழ் சினிமா இயக்குநர்களும் நடிகர்களும் கொடுத்துள்ளனர்.
இந்த ஜூலை மாதம் வெளியான படங்களில் இதுவரை 3பிஹெச்கே மற்றும் பறந்து போ படங்கள் மட்டுமே நல்ல விமர்சனத்தை பெற்று ஓரளவுக்கு வசூலை அள்ளியிருக்கின்றன. ஆனால், அந்த படங்களும் பெரிய பிளாக்பஸ்டர் படங்கள் என்று சொல்ல முடியாத நிலை தான் உள்ளது.

மதகஜராஜா, டிராகன், குட் பேட் அக்லி மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி படங்கள் தான் இதுவரை இந்த ஆண்டு வெளியான படங்களில் பாக்ஸ் ஆபீஸ் பிளாக்பஸ்டர் படங்கள் எனக் கூறுகின்றனர். இந்நிலையில், இந்த வாரம் நான்கிற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகவுள்ள நிலையில், ஒரு படமாவது ஒட்டுமொத்த ரசிகர்களை கவரக்கூடிய படமாக வருமா? என்றால் அது கேள்விக்குறிதான் என்கின்றனர். சரி, இந்த வாரம் வெளியாகவுள்ள படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
பன் பட்டர் ஜாம்: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு டைட்டில் வின்னரான ராஜு ஜெயமோகன் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். அவர் ஹீரோவாக அறிமுகமாகவுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படம் இன்று வெளியாகிறது. தளபதி விஜய் இந்த படத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். காதல், திருமணம் மற்றும் விவாகரத்து என இன்றைய கால இளைஞர்கள் அவசரப்படும் கதையை படமாக்கி இருக்கிறார் இயக்குநர் ராகவ் மிர்தத். அடுத்த வாரம் வெளியாகவுள்ள விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படத்திலும் இதே போன்ற கதை தான் என்பது டிரைலரை பார்க்கும் போது தெரிய வந்தது. பிக் பாஸில் ராஜுவுக்கு சின்னத்திரையில் மக்கள் அன்பு கிடைத்ததை போல வெள்ளித்திரையில் எந்தளவுக்கு கிடைக்கப் போகிறது என்பது இன்று தெரிந்துவிடும்.
டிரெண்டிங்: சிவராஜ் நாகராஜ் இயக்கத்தில் கலையரசன், பிரியாலயா மற்றும் பிரேம்குமார் நடிப்பில் உருவாகியுள்ள டிரெண்டிங் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் பத்திரிகையாளர் காட்சியில் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும், பிளாக்பஸ்டர் விமர்சனங்கள் கிடைக்கவில்லை. மக்கள் இந்த படத்தை எந்தளவுக்கு வெற்றிப் படமாக மாற்றப் போகின்றனர் என்பது நாளை பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்டில் தெரிய வரும்.

கெவி: தமிழ் தயாளன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதவன், ஷீலா ராஜ்குமார் நடிப்பில் மலைக்கிராம மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள கெவி திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் கதை, பின்னணி இசை, ஒளிப்பதிவு உள்ளிட்டவை பாராட்டுக்களை அள்ளியுள்ளது. மைனா, கும்கி வரிசையில் இந்த படம் ரசிகர்களை கவருமா? அல்லது தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் செலுத்தமாட்டார்களா என்பது இன்று தெரிந்துவிடும்.
ஜென்ம நட்சத்திரம்: மணி வர்மன் இயக்கத்தில் காளி வெங்கட், மால்வி மல்கோத்ரா, முனிஷ்காந்த், சந்தானபாரதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பேய் படமாக ஜென்ம நட்சத்திரம் படம் உருவாகி இருக்கிறது. இன்று வெளியாகவுள்ள இந்த படத்துக்கும் பெரிதாக டிக்கெட் புக்கிங் புக் மை ஷோ உள்ளிட்ட தளங்களில் இல்லாத நிலையில், இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸ் பிளாக்பஸ்டர் படமாக எந்த படமும் மாற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அடுத்த வாரம் விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி மற்றும் மாரீசன் உள்ளிட்ட படங்கள் தான் இந்த ஜூலை மாதத்தின் மிகப்பெரிய நம்பிக்கை படங்கள் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











