அனன்யாவால் ரூ. 50 லட்சம் நஷ்டம்... அதிதி பட தயாரிப்பாளர் புலம்பல்!
சென்னை: அதிதி பட படப்பிடிப்பில் நடிகை அனன்யா பண்ணிய விரும்பத்தகாத செயல்களால் தனக்கு ரூ.50 லட்சம் நஷ்டமாகியுள்ளதாக அப்படத்தின் வில்லன் நடிகரும். தயாரிப்பாளருமான நிகேஷ்ராம் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு, திருமணம், குடும்பத்தில் பிரச்சினை என சில காலம் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார் நடிகை அனன்யா. இந்நிலையில், சமீபத்தில் அவர் நாயகியாக நடித்த 'அதிதி' படம் ரிலீசானது.
இப்படத்தின் தயாரிப்பாளரான நிகேஷ்ராமே, இப்படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். படப்பிடிப்பின் போது அனன்யா பல விரும்பத் தகாத செயல்களில் ஈடுபட்டதாகவும், அதனால் தனக்கு பணம் வீண் விரயமானதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் நிகேஷ்ராம்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு நிகேஷ்ராம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :-

சம்பளம்....
‘அதிதி' படத்தில் நடிக்க அனன்யாவை அணுகியதும் ரூ.22 லட்சம் சம்பளம் கேட்டார். அதை கொடுத்தோம்.

ஆஞ்சனேயலு....
படப்பிடிப்புக்கு கணவர் என சொல்லப்படும் ஆஞ்சனேயலுவை அழைத்து வந்தார். இருவரும் வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை ஒதுக்கினோம்.

தங்க மறுப்பு...
பத்திரிகையாளர்களும், திரையுலகினரும் தங்களை பார்த்து விடுவர் எனச்சொல்லி அதில் தங்க மறுத்தார். அண்ணாசாலையில் உள்ள ஓட்டல் உணவுதான் பிடிக்கும். எனவே அங்கே ரூம் போடுங்கள் என்றார். அதையும் செய்தோம்.

வாடகைக் கார்...
சொந்த உபயோகத்துக்காக சொகுசு காரை எங்கள் செலவில் வாடகைக்கு எடுத்து ஊர் சுற்றினார்.

ஓட்டலில் காசு....
ஓட்டல் நிர்வாகத்தினரிடம் எங்களுக்கு தெரியாமல் ரொக்க பணத்தை வாங்கிக் கொண்டு அதையும் பில் கணக்கில் சேர்த்து விட்டார். அந்த தொகையை தர முடியாது என்றதும், படத்தில் நடிக்கமாட்டேன் என்றார்.

சாப்பாடு வாங்க ஒரு கார்...
ஏற்கனவே அவரை வைத்து பாதி படம் எடுக்கப்பட்டு விட்டது. வேறு வழியின்றி பணத்தை கொடுத்தேன். படப்பிடிப்பில் அவர் சொல்லும் ஓட்டல்களில் போய் சாப்பாடு வாங்குவதற்கென்றே ஒரு வாடகை கார் சுற்றிக் கொண்டிருந்தது.

படப்பிடிப்பில் தாமதம்...
படப்பிடிப்புக்கு காலை 8 மணிக்கு தயாராக இருப்போம். ஆனால் ஓட்டலில் 10 மணிக்கு விழித்து 11 மணிக்குதான் படப்பிடிப்புக்கு வருவார்.

பயணச் செலவு...
கென்யாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு அது ரத்தாகிவிட்டது. உடனே கென்யாவுக்கு ஏன் போகவில்லை என சண்டை போட்டு அதற்கான பயண செலவு தொகை ஒன்றரை லட்சத்தை எங்களிடம் வாங்கி விட்டனர்.

தொல்லை...
அனன்யாவும், ஆஞ்சநேயலுவும் எங்களுக்கு கொடுத்த தொல்லை கொஞ்ச நஞ்சமல்ல. அவரால் ரூ.50 லட்சம் வரை இழந்துவிட்டோம்' என இவ்வாறு அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











