கேன்ஸ் திரைப்பட விழா : மோடியை பாராட்டிய மாதவன்… எதுக்குனு தெரியுமா ?
பிரான்ஸ் : நடிகர் மாதவன் தற்போது ராக்கெட்டரி என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த திரைப்படம் நேற்று நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதில் மாதவனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
கேன்ஸ் விழாவில் பேசிய நடிகர் மாதவன் பிரதமர் மோடியைப் பாராட்டிப் பேசியுள்ளார்.

கேன்ஸ் திரைப்படவிழா
75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட நடிகர் மாதவன், பிரதமர் மோடியின் "மைக்ரோ எகானாமி" திட்டம் வெற்றி பெற்றது குறித்து பாராட்டி பேசினார். அதில், விவசாயிகளுக்கு ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தவோ, வங்கி கணக்கை சரியாக கையாளத் தெரியாத ஒரு நாட்டில் டிஜிட்டல் மயத்தை உருவாக்கினார். இது சாத்தியம் இல்லை, பேரழிவை ஏற்படுத்தும் என்று உலகம் முழுவதும் சந்தேகத்துடன் பார்த்தன. ஆனால், இரண்டு ஆண்டுகளில் கதையே மாறிவிட்டது என்றார்.

"அதுதான் புதிய இந்தியா"
இன்று மைக்ரோ பொருளாதாரத்தைப் பயன்படுத்துவதில் இந்தியாவும் ஒன்றாக மாறியது. விவசாயிகளின் வங்கியில் பணம் இருக்கிறதா என்பதை அறிய பெரிதாக கல்வி அறிவு தேவையில்லை தொலைபேசி இருந்தால் போது என்ற நிலை வந்துள்ளது என்றார். "அதுதான் புதிய இந்தியா" என்று அவர் கூறினார். கேன்ஸில் இந்தியக் குழுவை வழிநடத்தும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மாதவன் பேசிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சிவப்பு கம்பள வரவேற்பு
கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவுக்கு இந்த ஆண்டு கவுரவ நாடு என்ற பெயர் கிடைத்துள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையில் இந்திய அணி இடம்பெற்றது. இதில், நவாசுதீன் சித்திக், கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ், சேகர் கபூர், பிரசூன் ஜோஷி மற்றும் பலர் சிவப்பு கம்பளத்தில் நடந்தனர்.

பிரபலங்கள்
தமிழ் திரையுலகை பொறுத்தவரை உலக நாயகன் கமல்ஹாசன், இசைப்புயல் ஏஆர் ரகுமான், பார்த்திபன், பா ரஞ்சித், மாதவன், தமன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல் பாலிவுட் திரையுலகில் ஊர்வசி ரெளட்டாலா, தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய் அவரது கணவர் அபிஷேக் பச்சன் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











