CaptainMiller: "கால்ல விழுடா செருப்பு பிஞ்சிரும்” கேப்டன் மில்லர் விழாவில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை
சென்னை: கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் கேப்டன் மில்லர் படக்குழுவினருடன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டனர். அப்போது இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரசிகரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கேப்டன் மில்லர் விழாவில் பாலியல் தொல்லை
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தனுஷ், ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அதேபோல், கேப்டன் மில்லர் விழாவுக்காக ரசிகர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்திருந்தனர். விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொடங்கியது. இதனிடையே ரசிகர்கள் கூட்டத்தில் திடீரென பெரும் பரபரப்பு நிலவியது. ரசிகர் ஒருவரை இளம்பெண் விரட்டி விரட்டி அடித்ததோடு அவரை தனது காலிலும் விழ வைத்தார்.
அதாவது கூட்டத்தில் ரசிகர் ஒருவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து அந்த ரசிகரை பிடித்த இளம் பெண், "கால்ல விழுடா... செருப்பு பிஞ்சிரும்..." என விரட்ட அவரும் அந்த பெண்ணின் காலில் விழுகிறார். பின்னர், "கைய வச்சிட்டு சும்மா இருக்க மாட்டியா... ஏன்டா நடிக்குற நாயே... அப்புறம் ஏன்டா ஓடுன.." என சட்டையை கொத்தாக பிடித்தபடி அவரை புரட்டி எடுத்தார்.

சுற்றியிருந்தவர்களுக்கு என்ன நடந்தது என தெரியும் முன்னரே அந்த இளைஞர் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். ரசிகரை தாக்கிய அந்த இளம்பெண் தொகுப்பாளர் ஐஸ்வர்யா தான் என பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். சரக்கு இசை வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் திடீரென மாலை போட்டு சர்ச்சையை கிளப்பிய அதே ஐஸ்வர்யா தான் என பலரும் கூறி வருகின்றனர். அதேநேரம் கேப்டன் மில்லர் விழாவில் என்ன நடந்தது என்றும் முழுமையாக தெரியவில்லை.
அதேபோல், கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தனுஷ் ரசிகரா அல்லது பார்வையாளரா என்றும் தெரியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து கேப்டன் மில்லர் படக்குழுவினர் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. முன்னதாக ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் சர்ச்சையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











