Captain Miller: “நடிப்பு அசுரன் தனுஷ்.. கேப்டன் மில்லர் அருமையான படைப்பு” பாராட்டித் தள்ளிய பிரபலம்
சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் நேற்று முதல் உலகெங்கும் வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் பீரியட் ஜானரில் உருவாகியுள்ளது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள கேப்டன் மில்லர் படத்தை நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார். தனுஷையும் நடிப்பு அசுரன் என அவர் புகழ்ந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கேப்டன் மில்லருக்கு உதயநிதி பாராட்டு
தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் நேற்று உலகம் முழுக்க வெளியானது. எதிர்பார்த்தபடியே இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தனுஷுடன் ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ராக்கி, சாணிக் காகிதம் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன், கேப்டன் மில்லரையும் இயக்கியுள்ளார்.

முதன்முறையாக தனுஷ் - அருண் மாதேஸ்வரன் கூட்டணி கேப்டன் மில்லரில் இணைந்துள்ளது. அதனால் இந்தப் படத்துக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்தது. 1930 முதல் 40களில் நடக்கும் பீரியட் ஜானர் படமாக கேப்டன் மில்லர் உருவாகியுள்ளது. தனுஷ் மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடித்து மிரட்டியுள்ளார். தனது கிராம மக்களுக்காக பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்க்கும் போராளி, கொள்ளைக்கரான், ராணுவ வீரன் என்ற கேப்டன் மில்லர் கேரக்டர் என வெரைட்டியாக நடிப்பில் மிரட்டியுள்ளார்.
கேப்டன் மில்லர் படத்தை அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பாராட்டித் தள்ளியுள்ளார். உதயநிதி கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். அரசியல் பின்னணியில் உருவாகியிருந்த மாமன்னனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படம் குறித்து ட்வீட் செய்துள்ள உதயநிதி, தனுஷை நடிப்பு அசுரன் என்றும், கேப்டன் மில்லர் தரமான படைப்பு எனவும் பாராட்டியுள்ளார்.
அதில், “ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், சிவராஜ்குமார், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், இசையமைப்பாளர் சகோதரர் ஜிவி பிரகாஷ், பிரியங்கா மோகன், தயாரிப்பாளர், சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” என பாராட்டியுள்ளார்.
உதயநிதியின் இந்த டிவிட்டர் பதிவை தனுஷ் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்தப் படத்திற்கு கிடைத்த முதல் பாராட்டு இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் ஸ்பெஷல் ஷோவை உதயநிதி பார்க்கவிருப்பதாக சொல்லப்பட்டது. இதனால் அயலான் படத்துக்கு உதயநிதியின் கமெண்ட்ஸ் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் கேப்டன் மில்லர் படத்தை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











