Captain Miller: “கேப்டன் மில்லர் கதை திருட்டு... அசிங்கமா இருக்கு..” காட்டமான வேல ராமமூர்த்தி!
சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் கதை குறித்து சர்ச்சை உருவாகியுள்ளது. எழுத்தாளர் வேல ராமமூர்த்தியின் பட்டத்து யானை நாவலை அடிப்படையாக வைத்து தான் கேப்டன் மில்லர் வந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து எழுத்தாளர் வேல ராமமூர்த்தி காட்டமாக தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
இதெல்லாம் அசிங்கமா இல்லையா
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் 12ம் தேதி வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் பீரியட் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ரிலீஸுக்கு முன்னர் அதிக எதிர்பார்ப்பு இருந்த கேப்டன் மில்லர் படத்துக்கு, முதல் நாளில் மட்டும் நல்ல ஓபனிங் கிடைத்தது. ஆனால், அதன் பின் ரசிகர்களிடம் பெரிதாக வரவேற்பு இல்லை.

இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் கதை பட்டத்து யானை நாவலை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்தன. அதாவது எழுத்தாளர் வேல ராமமூர்த்தியின் பட்டத்து யானை நாவலில் இருந்து தான் கேப்டன் மில்லர் கதையை உருவாக்கியுள்ளார் அருண் மாதேஸ்வரன். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து எழுத்தாளர் வேல ராமமூர்த்தியும் இதுகுறித்து காட்டமாக பேசியுள்ளார்.
அதில், கேப்டன் மில்லர் படத்தின் கதை எனது பட்டத்து யானை நாவலை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாக கேள்விப்பட்டேன். நான் எழுதிய பட்டத்து யானை நாவலின் ஹீரோ பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பின்னர் அதிலிருந்து வெளியேறி எப்படி சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பான் என்பது தான் கதை. அதனை கொஞ்சம் மாற்றி கேப்டன் மில்லர் படமாக எடுத்துள்ளனர்.
இதெல்லாம் செய்ய அசிங்கமா இல்லையா, பட்டத்து யானை நாவலை எழுதிய நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன். என்னிடம் ஒருவார்த்தை கேட்டிருக்கலாம் அல்லது அனுமதி வாங்கியிருக்கலாம். நான் எழுதுவதெல்லாம் எனது ஊரின், எனது மக்களின் வாழ்வியல். இதனை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் திருடிவிடுகின்றனர். கேப்டன் மில்லர் மட்டுமல்ல இன்னும் பல படங்களிலும் எனது கதைகள், சீன்கள் திருடப்பட்டுள்ளன.
ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் கூட எனது நாவலில் இருந்து சீன்கள் வைக்கபட்டுள்ளதாக தனது வாசகர்கள் வேதனை தெரிவித்திருந்தனர். இப்படி கதையை திருடுபவர்கள் எல்லாம் மனசாட்சியே இல்லாமல் பேசுவார்கள். அப்படியும் ஆதாரத்துடன் கேட்டால் நம்மையே அசர வைக்கும் படி பதில் வரும். கேப்டன் மில்லர் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன்.
புகார் தந்தாலும்.. வலுத்தவன் பக்கம்தான் நியாயம் பேசுவார்கள். பேர், ஊர், சீக்வன்ஸ் போன்றவற்றை மாற்றி படத்தை எடுத்திருப்பார்கள். இதெல்லாம் அவர்கள் தப்பிக்க செய்யும் முன்னேற்பாட்டு யுக்திகள். தமிழ் திரையுலகில் இப்படி அடிக்கடி நடப்பது அசிங்கமாக உள்ளது. ஒரு படைப்பாளியாக இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என மிக காட்டமாக விமர்சித்துள்ளார் வேல ராமமூர்த்தி.
இந்நிலையில், கேப்டன் மில்லர் கதை திருட்டு குறித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரனோ அல்லது படக்குழுவினரோ இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தனுஷும் இதுவரை கேப்டன் மில்லர் கதை திருட்டு பிரச்சினை குறித்து தனது கருத்தை பகிரவில்லை.


Click it and Unblock the Notifications











