Ayalaan VS Captain Miller: அடேங்கப்பா! கேப்டன் மில்லர் நெருங்க முடியாத இடத்தில் அயலான் வசூல்
சென்னை: 2024 பொங்கல் ரேஸில் தனுஷ் - சிவகார்த்திகேயன் நேருக்கு நேர் மோதினர். அதன்படி, தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படங்கள் 12ம் தேதி ரிலீஸாகின. இதில் ஆரம்பத்தில் கேப்டன் மில்லர் மாஸ் காட்டினாலும், இப்போது அயலான் தான் சிறப்பான சம்பவம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டன் மில்லர் VS அயலான் பாக்ஸ் ஆபிஸ்
இந்தாண்டு பொங்கலுக்கு அயலான், கேப்டன் மில்லர், லால் சலாம் படங்கள் வெளியாகவிருந்தன. இதில் ரஜினி கேமியோ ரோலில் நடித்திருந்த லால் சலாம் பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கியது. இந்தப் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. லால் சலாம் விலகியதை அடுத்து தனுஷின் கேப்டன் மில்லரும், சிவகார்த்திகேயனின் அயலானும் பொங்கல் ரேஸில் களமிறங்கின.

இதனால் ரசிகர்கள் மத்தியில், இந்தாண்டு பொங்கல் வின்னர் யார் என்ற கேள்வி எழுந்தது. தனுஷ், சிவகார்த்திகேயன் இருவருக்கும் சம அளவில் ரசிகர்கள் இருந்தாலும், மக்களிடம் எந்தப் படத்துக்கு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், கேப்டன் மில்லர், அயலான் என இரண்டு படங்களும் ஜன.12ம் தேதி ரிலீஸாகின. அதேபோல், விஜய் சேதுபதி இந்தியில் நடித்துள்ள மெர்ரி கிறிஸ்துமஸ், அருண் விஜய்யின் மிஸன் ஆகிய படங்களும் வெளியாகின.
தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்ததால், முதல் நாள் மட்டுமே சிறப்பான ஓபனிங் இருந்தது. ஆனால், விமர்சன ரீதியாக கதை, திரைக்கதை, மேக்கிங் ஆகியவை சொதப்பிவிட்டதாக கமெண்ட்ஸ்கள் வைரலாகின. இதனால், அடுத்தடுத்த நாட்களில் கேப்டன் மில்லர் படத்துக்கான வரவேற்பும், பாக்ஸ் ஆபிஸ் வசூலும் மிகப் பெரிய அளவில் குறையத் தொடங்கின.
அதேநேரம் சிவகார்த்திகேயனின் அயலான் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல ரீச் ஆனது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் காமெடி ப்ளஸ் மேக்கிங் என பக்கா கமர்சியல் ஹிட் அடித்தது. இதனால் அயலான் வசூல் முதல் நாளை விட அடுத்தடுத்த நாட்களில் மேலும் அதிகரித்தன. அதேபோல், 4 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழுவே அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றோடு பொங்கல் விடுமுறை முடிந்துவிட்டது.
அதனடிப்படையில் 12ம் தேதி முதல் நேற்று வரையிலான முதல் 6 நாட்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி தனுஷின் கேப்டன் மில்லர் 38 முதல் 40 கோடி ரூபாய் மட்டுமே கலெக்ஷன் செய்துள்ளது. ஆனால், சிவகார்த்திகேயனின் அயலான் இதுவரை 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சிவகார்த்திகேயன் தான் இந்தாண்டு பொங்கல் ரேஸில் வின்னர் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











